நான்

மார்ச் 7, 2009

அபிராமி அக்கா

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 6:12 பிப

நான்கைந்து வருடங்களுக்கொரு முறை மாற்றலில் செல்ல வேண்டிய அரசாங்க உத்யோகம் எனது தந்தைக்கு.நாங்கள் தங்கியிருந்த ஒவ்வொரு ஊரும்,நண்பர்களும் எனக்கேற்றதாக மாறுகின்ற தருணத்தில் எங்களது இடம் பெயர்தல் ஆரம்பமாகும். இம்முறை சென்னையிலிருந்து மதுரைக்கு.

அப்பாவும்,அம்மாவும் எவ்வித புகாருமின்றி பயணத்திற்கு தயாரானார்கள்.காயத்ரியும் உற்சாகமாகவே கிளம்பினாள்.நானும் மதுரையை நோக்கி பயணித்தேன்.வேறென்ன செய்யமுடியும் பத்தொன்பது வயது கல்லூரி மாணவன்?

எதிர்பார்த்ததைவிட மதுரை மிக மோசமாக இருந்தது.எங்கு பார்த்தாலும் ஒரே புழுதி.நக்கல் என்ற பெயரில் எல்லோரும் ஒரே மாதிரி உளறிக் கொண்டிருந்தார்கள்.இது போதாதென்று எதற்கெடுத்தாலும் அண்ணே நொண்ணேக்கள்.கல்லூரிக்குச் சென்றாலும் இதே நிலை தான்.

அப்பாவும்,அம்மாவும் சுணக்கம் ஏதுமின்றி அலுவலகத்திலும் சமையலறையிலும் பொழுதைக் கழித்தனர்.காயத்ரிக்கு யாதும் ஊரே.ஒரு மாதத்திற்குள்ளாகவேஅவளுக்குத் தெருவெங்கும் தோழிகள் உருவாகியிருந்தார்கள்.

அன்று காயத்ரி படுக்கையில் சுருண்டு படுத்திருந்தாள்.காய்ச்சல்.அடுத்த தெருவிலிருக்கும் அவளது தோழியிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துவிடும்படி கெஞ்சினாள்.அவள் இருந்த நிலையைப் பார்த்தும்,வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அலுப்பாலும், வழிகேட்டுப் புத்தகத்தை வாங்கிச் சென்றேன்.

வீட்டைக்கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை.பிரம்மாண்டமாகவும் ,பிரமிப்பூட்டுவதாகவும் இருந்தது.தயக்கத்துடன் அழைப்புமணியை அழுத்தினேன்.வயதான பாட்டியொருத்தி கதவைத் திறந்தாள்.”அக்காட்ட இந்த புக்க தந்துருங்க” என்று நான் முடிப்பதற்கு முன்பாக, ”அமிராமி ஒன்னத் தேடிட்டு பொடியன் ஒர்த்தன் வந்திருக்கியான்” என்று குரல் கொடுத்தாள்.

வயதுக்கேற்ற உருவமிருக்காது என்பதால் என் வயதை பதினைந்து பதினாறுக்கு மேல் யாரும் மதிக்க மாட்டார்கள்.சற்றுநேரத்தில் ஒரு பெண் வெளிப்பட்டாள்.இதுபோன்றதொரு பேரழகை நான் கண்டதில்லை!எனதுடல் சிலிர்த்துக் கொண்டது!

இதமாய் புன்னகைத்தாள்.நிலையிழந்து நின்றேன்!

”காயத்ரி இந்த புக்கை ஒங்ககிட்ட குடுக்கச் சொன்னா” என்றேன்.

”புக்குக்கு ஒண்ணும் அவசரமில்லையே.சரி உக்கார். காபி எடுத்திட்டு வரேன்”

காபி தந்தவள் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தாள்.தடுமாற்றத்துடன் பதிலளித்துக்கொண்டிருந்தேன்.

அவளது குரல் இனிமையாகவும்,மென்மையாகவும் இருந்தது.சரளமாகப்பேசினாள்.பிரமிப்பின் காரணமாக எனது பதில்கள் பெரும்பாலும் தலையசைப்பில் முடிந்தன.பேச்சைத் தொடர்வதற்கு ஆர்வமிருந்தாலும் இயல்பாகத் தொடரமுடியாததால்,காயத்ரியுடன் இன்னொரு நாளில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தேன்.அதிர்ஷ்டத்துக்கு,காயத்ரிக்கு,அப்பாவை இடமாற்றம் செய்த அரசாங்கத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். 

அடுத்த நாள் காயத்ரியுடன் அபிராமி வீட்டிற்குச் சென்றேன்.ஆர்மோனியத்தை இசைத்தபடியே பாடிக் கொண்டிருந்தாள்.அபிராமியும்,நானும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.பாட்டு,சினிமா,புத்தங்கள் என்று பல திசைகளிலும் சென்றது.அபிராமிக்கு இருபத்திநான்கு வயது.மதுரை கே.கே.நகரிலுள்ள இந்தியன் வங்கியில் வேலை.மதுரை போன்ற ஊரில் அவள் மட்டும் இல்லாமலிருந்தால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பேன்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை.வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தோம்.திடீரென்று, ”டேய் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா” என் கைகளை இறுகப் பிடித்தவாறு தீவிரமாகச் சொன்னாள்.இறைவன் மகத்தானவன் என்று உணர்ந்து கொண்டது அப்பொழுதுதான்.

2

அனைவரது எதிர்ப்பையும் மீறி,திருமணம் முடித்து தாம்பரத்தில் குடியேறினோம்.ஒரு மாதத்தில் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது.

திருமணநாளிலிருந்து,ஒவ்வொரு கணமும் என் வாழ்வின் பேரின்பம்!திருமணம் முடித்த முதல்நாள் இரவில்,அவள் ஆடிய நடனம்!பாடிய பாடல்கள்!எனது உடலில் நிகழ்த்திய அற்புதங்கள்!அப்பப்பா!கிச்சுகிச்சு மூட்டி,சிரிக்கவைத்து….நிறுத்தி….திரும்பவும் தொடர்ந்து,சிரிக்கவைத்து….நிறுத்தி….மீண்டும் சிரிக்கவைத்து என்பது போல் தொடர்ந்து கொண்டே இருந்தாள்.இறுதியில் கண்களில் வழிந்தோடும் கண்ணீரோடு போதுமடா இன்பம் என்று வலிமையிழந்து, இயக்கமற்று,கால்களையும் கைகளையும் விரித்துக்கொண்டு கிறக்கத்தில் கிடப்பது போன்றதொரு நிலையில் இருந்தேன்!

ஐம்புலன்களிலும் இன்பத்தின் சிகரத்தை எனக்கு அவள் அளித்தாள்!அவள் வழங்கிய இன்பத்தின் உச்சத்தை ஒவ்வொரு கணமும் அவளே தாண்டினாள்!

என்னுடனேயே இருந்து கொண்டு,பேசிக்கொண்டு எந்த கணத்தில் அற்புதங்களை நிகழ்த்த அவள் தீர்மானிக்கிறாள் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது!அவளிடமிருந்து கிளம்பும் இன்பக்கதிர்கள், எனக்குள் பாய்ந்து,பரவசத்தை அளித்து,வெளியேறி,அவளது இன்பச்சுரபியில் குவிந்து,முன்பைவிட உத்வேகத்துடன் வெளிப்பட்டு….என்னை மீண்டும் வீழ்த்தி…. இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டேயிருக்கும்!

மூன்றுமாத எனது இந்த சந்தோசங்கள்,திடீரென்று மொத்தமாக வடிந்து போனது.ஒருநாள் அவளது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.நான் வந்ததுகூடத் தெரியாமல்,அவளுடன் வேலை பார்க்கும் ஒருவனிடம் சந்தோசக் களிப்புடன் பேசிக் கொண்டிருந்தாள்.என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.அவளைப் பார்க்காமலே திரும்பிவிட்டேன்.அது நடந்த இரண்டு நாளில் அவன் வீடுவரை வந்து,அவளை விட்டுவிட்டுப் போனான்.

கோபத்தை அடக்கிக்கொண்டு, ”இது நல்லதுக்கில்ல.பாத்துக்க.” என்றேன்.”

 சற்று வித்யாசமாக என்னைப் பார்த்துவிட்டு,”தலை வலிக்குது.தூங்கப்போறேன்.நாளைக்குப் பேசுவோம்.”சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அடுத்தநாள் அது  விசயமாக அவள் எதுவும் பேசவில்லை.நானும் பேசிக்கொள்ளவில்லை.அன்று இரவும் அவனுடன் பேசிக்கொண்டே வீடு திரும்பினாள்.

”மனசுல என்ன நெனச்சுக்கிட்டிருக்க?பாக்குறவங்க என்ன நெனப்பாங்க?” கோபத்துடன் கத்தினேன்.

”அடுத்தவங்க என்ன நெனச்சா நமக்கென்ன?நீ என்ன நெனைக்கிற?”

”நா நெனைக்கிறதுக்கு என்ன இருக்கு?நீ செய்றது சுத்தமாப் பிடிக்கல.அவ்ளதான்.”

”எம்மேல சந்தேகப்படுறியா?”

”நம்ம ஒண்ணத் தொடங்கினா,அது எதில போயி முடியும்னு ஒரு கணக்கு இருக்குல்ல.”

”சாதாரணமான இந்த  விசயத்தை ஒன்னால புரிஞ்சுக்கமுடியலன்னா பேசாம  விட்டுட்டுப் போ.”கோபத்துடன் சொன்னாள்.

நான் கத்த ஆரம்பித்தேன்.பதிலுக்கு அவளும் திட்டினாள்.ஒரு நிலையில்,வாக்குவாதத்தைத் திடீரென நிறுத்திவிட்டு,”நா கவிதா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.நாளைக்குப் பாப்போம்.”  என்று உடனே கிளம்பிவிட்டாள்.நான் சமாதானப் படுத்தினாலும் கேட்கவில்லை.

அடுத்தநாள் காலை வரை வரவில்லை.மதியம்,அவளது அலுவலகத்திற்கு சென்று பார்த்தேன்.எதுவும் நடக்காதது போல் சந்தோசமாகப் பேசினாள்.கிளம்பும்போது,”நடந்தது போகட்டும்.இனிமேட்டாவது ஒழுங்கா இரு.” என்றேன்.

ஏதோ விசித்திரப்பிராணியைப் பார்ப்பது போல் என்னை உற்றுப் பார்த்துவிட்டு,”ஒன்னப் பத்தி நா நெனச்சது தப்பு.நீ வீட்டுக்குப் போ.நா வர்றதா இல்ல.” சொல்லிவிட்டு அவளது இடத்திற்கு வேகமாகச் சென்றுவிட்டாள்.கோபத்துடன் நானும் வெளியேறிவிட்டேன். மனது கேட்காமல் இரண்டு நாள் கழித்து அவளை அழைத்துவரச் சென்றேன்.அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை.நானும் வந்துவிட்டேன்.ஒரு மாதத்தில் மதுரைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிவிட்டுச் சென்றுவிட்டாள்.

கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாக,கஷ்டமாகத் தான்இருந்தது.அதுக்கப்புறம்,பெரிசா ஒண்ணுமில்ல.இப்ப எனக்கு வேளச்சேரில ரெண்டு கிரவுண்ட்ல வீடு!அன்பான,அடக்கமான பொண்டாட்டி!அழகான ரெண்டு புள்ளைங்க!எல்லாமே இருக்கு!வேறென்ன வேணும் மனுசனுக்கு!அவளப்பத்தி விசாரிச்சதில வெவரம் ஒண்ணும் பெரிசாக் கெடைக்கல.மதுரயிலதான் எங்கயோ இருக்கா.இந்தியன் பேங்க்ல ஜி.எம்மாம்!எப்டி இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ பெரிய போஸ்ட்டுக்கு வந்தான்னு தான் தெரியல!என்ன இருந்து என்னத்துக்கு!வாழாவெட்டியாத் தான இருக்கா!

பிப்ரவரி 28, 2009

வீட்டுப்பாடம்

Filed under: Uncategorized — ஜெய்க்குமார் @ 4:37 பிப

பரத் ஸ்கூல்பேக்கை தோளில் மாட்ட ஆரம்பித்தான்.”Bye children.see you tomorrow” என்று டீச்சர் சொல்ல, பதிலுக்கு உற்சாகக்குரலில்,”Bye ma’m”  என சத்தமாய் சொல்லிக்கொண்டே  I  “B”க்காரர்கள் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள்.பரத்துக்கு முன்பாக நடந்து கொண்டிருந்த விக்னேஷின் வலது கையில் லஞ்ச்பேக்கும்,இடது கையில் colouring book ம் இருந்தது.வேகமாக நடந்து பரத்தும் விக்னேசுடன் சேர்ந்து கொண்டான்.

”book ஐ தாடா.பாத்திட்டுத் தரேன்” என்றான் பரத்.

”பாத்திட்டு சீக்கிரமா தந்துரணும்” சொல்லிக்கொண்டே கொடுத்தான்.

நடப்பதை நிறுத்திவிட்டு,பரத் பக்கங்களைத் திருப்ப ஆரம்பித்தான்.ஒரு பக்கத்தில்அவனது கண்கள்  நின்றுவிட்டன.

”டே லேட்டாகுது.நா போகணும்” என்றான் விக்னேஷ்.அவனது வார்த்தைகள் பரத்தின் காதில் விழவில்லை.கைகளை விரித்துத் தலைகீழாய் நிற்கும் ஜோக்கரையும்,ஜோக்கரின் முகத்துக்கருகில் நின்று குரைக்கும் நாய்க்குட்டியையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.”பஸ்சுக்கு நேரமாச்சு.நா போறேன்” சொல்லிக்கொண்டே பரத்தின் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.அடுத்தமுறை,தனக்குப் பரிசு கிடைக்கும்போது,விக்னேசிடம் காட்டவே கூடாது என்று மனதுக்குள்  நினைத்தவாறு நடக்கத் தொடங்கினான்.

விளையாட்டு மைதானத்தின் வழியாகச் செல்லும்போது, கம்பிவலைத் தடுப்பைத் தாண்டியிருந்த குட்டை நீரில், வாத்துக்கூட்டம் சென்று கொண்டிருந்தது.கம்பியைப் பிடித்துக்கொண்டு, எம்பி நின்று பார்த்தான்.அவை போடும் சத்தத்தைக் கேட்டு,”க்வாக் க்வாக்” என்றான்.பதிலுக்கு அவையும் ”க்வாக் க்வாக் க்வாக்” என்றன.கூட்டத்திலிருந்து விலகி, தனியாக, ஒரு வாத்து தலையைத் தூக்குவதும்,திருப்புவதுமாக இருந்தது.சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.திடீரென்று, கல் ஒன்றை எடுத்து,அதன் மேல் எறிந்தான்.அது க்வாக்கிக்கொண்டே ஓடிவிட்டது.சிரித்துக்கொண்டே பஸ்சை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

”ஏண்டா லேட்டு?ஒனக்காக எவ்ளோ நேரம் காத்திட்டிருக்கது?”திட்டிக்கொண்டே ஏற்றிவிட்டான் பஸ் அண்ணா.பதிலேதும் கூறாமல்,சுருங்கிய முகத்துடன், அவனது வழக்கமான இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டான்.

-0-

”என்னம்மா ஒடம்பெல்லாம் ஒரே அழுக்கா இருக்கு.எங்கயாவது விழுந்தயா?”

”இல்ல மம்மி.நானும் கிருத்தும் கிரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தமா.அப்ப பின்னால இருந்து  நிர்மல் தள்ளி விட்டுட்டான்.”

”சரி.சரி.சீக்கிரமா ட்ரெஸ்ஸ கழட்டு.குளிச்சிட்டு சாப்பிடலாம்.”

”மம்மி இன்னக்கி என்ன டிபன்?”

”டிபன் இல்லடா.சோறும்,மீன் குழம்பும்.”

”அய்.ஜாலி.’ப்ளாக் பிஷ்’ இருக்கா மம்மி?”

”இருக்க்குடா.எத்தன தடவ சொல்றது அது ப்ளாக் பிஷ் இல்ல,பிஷ் ஃப்ரைன்னு.சரி.வா சீக்கிரமா ட்ரெஸ்ஸ கழட்டு.”

”மம்மி நாந்தான் குளிப்பேன்.காலையிலேயே சொன்னேன்ல.”

”ஒடம்பெல்லாம் ரொம்ப அழுக்கா இருக்குடா.இன்னக்கி மட்டும் மம்மி குளுப்பாட்டி விடுறேன்.நாளேலிருந்து நீயே குளிச்சுக்கோ”

”போங்க மம்மி டெய்லி இப்டித்தா ஏமாத்றீங்க.இன்னக்கி நானே தா குளிப்பேன்.”சிணுங்க ஆரம்பித்தான்.

” சரி நீயே குளிச்சுக்கோ.ஆனா நல்லா சோப்பு போட்டு குளி.” சொல்லிக்கொண்டே அவனது உடுப்புகளையும்,ஜட்டியையும் கழட்டிவிட்டாள்.

குளிக்கச்செல்லும் போது, பொம்மைகள் இருக்கும் பெட்டியின் மேலாக இருந்த ‘பேட்மேன்’ பரத்தின் கண்களில் பட்டது.அதை ஒரு கையில் எடுத்து வைத்துக்கொண்டு, பெட்டிக்குள் எதையோ தேட ஆரம்பித்தான்.கண்ணில் ‘சூப்பர் மேன்’ சிக்கியதும்,அதையும் எடுத்துக்கொண்டு, தரையில் அமர்ந்து விளையாடத் தொடங்கினான்.

”யா யா…. ஊ… யா….ஊ யா யா….”  சூப்பர்மேனுக்கு பேட்மேனால் சரியான அடி!உதை!பலத்த,ஆக்ரோசமான தாக்குதலில் நிலைகுலைந்து போன சூப்பர்மேன் தூரமாய்  போய் விழுந்தான்.எழுந்து சென்று, சூப்பர்மேனை எடுத்து வந்தான்.திரும்பவும் அடி! உதை!  இப்போது சூப்பர்மேன் பறந்து போய் விழுந்தான்.சூப்பர்மேனைப் புறக்கணித்துவிட்டு, பெட்டியில் துழாவத் தொடங்கினான்.’ரெட் ரேஞ்சரை’ பார்த்தவுடன் உற்சாகமாக எடுத்தான்.அவனது தலையைக் காணவில்லை.நேற்று நடந்த யுத்தத்தில் தலையை இழந்திருந்தான்.இப்போது பேட்மேன் சின்னாபின்னமாக்கப் பட்டான்.அவன் பறந்துபோய் இன்னும் தொலைவில் விழுந்தான்.

சமையலறையிலிருந்து வெளிவந்த அம்மா,”டேய் இன்னும் குளிக்கப்போகலியா?” சொல்லிக்கொண்டே பரத்தை தூக்கினாள்.

சாப்பிட்டு முடிக்கும்போது,உறவுக்காரரைப் பார்ப்பதற்கு மருத்துவமனை வரை செல்வதாகவும்,வருவதற்கு இரவு பத்துமணி போல் ஆகிவிடும் என்றும் சொல்லி அருணுடைய அம்மா அருணை பரத்தின் வீட்டில் விட்டுச் சென்றாள்.

அருணைக் கண்டதும் பரத்துக்கு உற்சாகம்.அருணை அழைத்துக்கொண்டு விளையாடக் கிளம்பினான்.

”டேய் ஹோம் ஒர்க் எதும் இருக்கா?”என்று கேட்டாள் அம்மா.

”ஹேண்ட் ரைட்டிங் எழுதாமப் போயிட்டேன்னு தமிழ் மேம் நல்லா அடிச்சிட்டாங்க மம்மி” முதுகைத் தடவிக்கொண்டே சோகமாய்ச் சொன்னான்.

”சரி.அப்ப எழுதிட்டுப் போய் விளையாடு”

”போங்க மம்மி.கொஞ்ச நேரம் அருணோட விளையாடிட்டு அப்புறமா எழுதுறேன்.”

”வேற எதும் ஹோம் ஒர்க் இருக்காடா?”

பதில் சொல்லாமல் அருணை இழுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் ஓடினான்.மெத்தையில் ஏறி,குதித்து விளையாட ஆரம்பித்தார்கள்.

-0-

சிவா வீட்டுக்கு வந்தபோது இரவு மணி ஒன்பது.

”என்னங்க உங்க மகன என்ன பண்ணுறதுன்னே தெரியல.நாலு வரி எழுத வைக்கிறதுக்குள்ளஉயிரே போயிடுது.இன்னக்கி சோசியல் சயின்ஸ்ல மொத்தத்துக்கே அரைப்பக்கம் தான்.அத எழுதறதுக்கு ஒரே அழுகை.வழக்கமா ஸ்கூல்ல அடி வாங்கிறதுக்கு பயந்தாவது எழுதிடுவான். இன்னக்கி அருண் வந்ததுல அதுவும் போச்சு.முடிக்கிறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிருச்சு.”’

”சரி.சரி.நா குளிச்சிட்டு வந்துடுறேன்.”

” அதில்லங்க.போன வெள்ளிக்கிழமயே தமிழ் டீச்சர் ஹேண்ட் ரைட்டிங்க முடிச்சிட்டு வரச்சொல்லியிருப்பாங்க போலயிருக்கு.ஊர்லயிருந்து ஆளுங்க வந்ததுல நானும் கவனிக்கல.அவனுஞ் சொல்ல.ஹோம் ஒர்க்க முடிக்காததுனால இன்னக்கி நல்லா அடி வாங்கியிருக்கான்.மொத்தம் இருபது பேஜ்.இன்னக்கிப் பூரா உக்காந்து எழுதினாக் கூட முடிச்சிக்க மாட்டான்.அதுனால நானே எழுதிட்டேன்.பாருங்க அவன் எழுதின மாதிரி இருக்கா?”பக்கங்களைப் புரட்டிக் காண்பித்தாள்.

”அவன் எழுதின மாதிரியெல்லாம் இல்ல.ஆனா இப்போதைக்கு வேற வழியில்ல.குடுத்து விடு.எதுவும் ப்ராப்ளம்ன்னா நம்மளத் தான் கூப்ட்டுத் திட்டுவாங்க.அப்பப் பாத்துக்கலாம்.” என்றான்.

-0-

பொம்மைகளை வைத்து விளையாடிவிட்டு மெத்தைக்குத் திரும்பியிருந்தனர்.அருண் பல்டியடிக்க ஆரம்பித்தான்.பரத்தும் முயன்று பார்த்தான்.உருளத்தான் முடிந்ததே ஒழிய பல்டியடிக்கத் தெரியவில்லை.”அய்ய! ஒனக்கு பல்டி அடிக்கவே தெரியல.” என்று சொல்லி துள்ளி,குதித்து விதவிதமாக வித்தைகள் காண்பித்தான்.திரும்பவும் செய்வதற்கு பரத் முயற்சித்தான்.இன்னும் மோசமாக உருண்டான்.அருண் இவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.என்ன செய்வதென்று தெரியாமல் பரத் முழித்தான்.

திடீரென்று உற்சாகமானவனாய்,  ”பதாக,திரி பதாக,கத்தரி முக…..முஷ்டி,சிகரம்,கபித்தம்” என்று தனது பள்ளியில் புதிதாகக் கற்றுக்கொண்ட நாட்டிய  கைக்குறிகளை,விரல்களை மடக்கி,நீட்டியபடி தொடர்ச்சியாக அடுக்க ஆரம்பித்தான்.இப்பொழுது அருணுக்கு சொல்லவும் தெரியவில்லை;விரல்களால் செய்யவும் முடியவில்லை.பரத் சந்தோசமாக சிரித்தான்.

-0-

அருணை அவனது அம்மா அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில்,”மம்மி தூக்கம் வருது” என்றான்.

”ஏங்க அவன தூங்க வைக்கிறீங்களா?கொஞ்சம் வேலை இருக்கு.முடிச்சிட்டு வந்திடுறேன்.”என்றாள்.

பரத்தின் அருகே படுத்து சிவா அவனை உறங்க வைக்க ஆரம்பித்தான்.தூங்கிவிட்டான் என நினைத்து சிவா எழுந்தபோது,திடீரென்று கண்களைத் திறந்து பதட்டத்துடன் ”  மம்மி! ”என்று பலமாகக் கத்தினான்.

”என்னடா?என்னாச்சு?” சிவா  கேட்டான்.

” ஹேண்ட் ரைட்டிங் முடிச்சிட்டேனான்னு மம்மிட்ட கேட்கணும்பா.”

” எழுதி முடிச்சிட்டடா .மம்மி சொன்னாங்க.”

”சரிப்பா” என்று கண்களை மூடிய அடுத்த கணம் உறங்கிவிட்டான்.

ஜனவரி 27, 2009

வினோதினியின் நாட்குறிப்பு

Filed under: Uncategorized — ஜெய்க்குமார் @ 7:06 பிப

நண்பரின் பழையபேப்பர் கடையிலிருந்து, வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்துவருட நாட்குறிப்பு கிடைத்தது.கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த முதல் மூன்று வருடங்களும் ஒரு நாள் கூட விடாமல் தொடர்ச்சியாகவும்,அதன்பின் அவ்வப்போதுமாக சுமார் ஆயிரத்து முன்னூறு நாட்கள் எழுதியிருக்கிறாள்.அதிலிருந்து சில குறிப்புகளைத் தருகிறேன்.

-0-

 

                                                                                   வினோதினி!

                                                                                                            

                                                                  

-0-

கல்லூரியில் முதல் நாள். வேண்டாம் என்று சொன்னபோதும், அப்பா கல்லூரி வரை வந்து, விட்டுவிட்டுத் தான் போனார்.அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டேன்.நான் செல்லும் முன்பே ஐந்தாறு பேர் வகுப்பில் இருந்தனர்.ஒரு சிலரிடம் பேசினேன். என்னுடன் பள்ளியில் படித்த கலா,வசந்தியைத் தவிர்த்து மற்ற அனைவரும் வேறு எங்கிருந்தோ வந்தவர்கள்.பாடம் எதையும் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை.குமார் என்பவன் சரி விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தான்.மிகவும் இனிமையான நாள்.

-0-

இன்று சரியான மழை!பிய்த்தெறிந்துவிட்டது!நானும்,காயத்ரியும் சந்தோஷமாக நனைந்தோம்.வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது.அதன்பிறகு மின்னல்கள் நிகழ்த்திய ஆனந்தத்தாண்டவமிருக்கிறதே!அப்பப்பா காணக் கோடி கண்கள் வேண்டும்!இது போன்றதொரு அற்புதத்தை இனி எப்போது பார்க்கப் போகிறேனோ?

-0-

ஆகஸ்டு 6.பிறந்த நாள் என்பதால் அம்மாவுடன் காலையில் கோவிலுக்குப் போனேன்.நான் நினைத்ததைவிட நாள் மிக இனிமையாகக் கழிந்தது.மதியம் காலேஜ் கட்.ஹோட்டல்,ஐஸ்கிரீம்,பதினாறு வயதினிலே,திரும்பவும் ஐஸ்கிரீம்.படம் நன்றாக இருந்தது.முடிந்து வெளியே வரும்போது,தலையைக் கோதியவாறு என்னிடம் ஒருவன்,”இது எப்டி இருக்கு?” என்றான்.முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு,முறைப்பது போல் பார்த்தேன்.திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டான்.ஆள் பயங்கர ‘ஸ்மார்ட்’.பிரமாதமாக இருந்தான்.

-0-

அதரப்பள்ளி! மாமா சொன்னதைவிட அமர்க்களமாக இருந்தது.என்ன ஒரு பிரம்மாண்டம்!குதித்துவிடலாம் போலிருந்தது!உமாவுடனும்,காயத்ரியுடனும் ஒரு முறையாவது தனியாக வரவேண்டும்.பார்த்து!ஜாக்ரதை! என்று அம்மா முன்னூறு முறையாவது சொல்லியிருப்பாள்.கீழிருந்து பார்த்தபோது அருவி பேரழகுடன் இருந்தது!காயத்ரி வந்திருந்தால் கெட்ட ஆட்டம் போட்டிருப்பாள்!

-0-

இன்று உமா ஒரு ‘தினுசாக’ இருந்தாள்.பார்வையும் சரியில்லை.விசாரித்த பொழுது, ரமேஷ்பாபு ‘லெட்டர்’ குடுத்த விஷயம் தெரிந்தது.என்னென்னவோ பிதற்றியிருந்தான்.அவளுக்காக ஈபில் டவர் உச்சியிலிருந்து கூட விழுந்துவிடுவானாம்.கவிதை எழுதியிருந்தான்.”அதெல்லாம் வேணாம்.ரொம்ப தூரம் போகணும்.ஆசப்பட்டா நம்ம லைப்ரரி பில்டிங்ல இருந்து குதிக்கச்சொல்லு” என்றேன். சிரிப்பை அடக்கமுடியவில்லை.கோபமாக முறைத்தாள்.அத்துடன் விட்டுவிட்டேன்.”கவனமாக இரு” என்று மட்டும் கிளம்பும் போது சொன்னேன்.உமாவும் ‘விழுந்துவிட்டாள்’ என்று தான் நினைக்கிறேன்.காயத்ரி கேஸ் தான் இவளும்.

-0-

இன்று குட்டிக்கு முதல் ‘மழை’.பதினோரு வயது தான் ஆகிறது.பாவம்!எனக்கும்,ரம்யாவிற்கும் பரவாயில்லை.பதினான்கு வயதில் தான் வந்தது.நல்ல வேளையாக இன்று விடுமுறை.அழுது கொண்டே அம்மாவிடம் சொன்னாள்.வாரியணைத்து,மடியில் வைத்துக்கொண்டாள்.நான் தான் ‘மழைத்துணி’ வைத்துவிட்டேன்.

-0-

இன்று திருப்பதிக்குப் போயிருந்தோம்.சரியான கூட்டம்.வெயில்,புழுக்கம் தாங்கமுடியவில்லை.இனிமேல்,திருப்பதிக்கு வருவதாகயிருந்தால் டிசம்பரில் தான் கிளம்பவேண்டுமென்று அம்மாவிடம் சொன்னேன்.அருண் வழிநெடுக அடம் பிடித்து அழுது கொண்டே வந்தான்.ரம்யாவும்,குட்டியும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே வந்தார்கள்.எனக்குத்தான் பொழுதே போகவில்லை.

-0-

நான் வரைந்த ஓவியத்திற்கு இரண்டாவது பரிசு கிடைத்த்து.ஜட்ஜ் ஒரு முட்டாள்.வேறோரு காலேஜைச் சேர்ந்த எவனோ ஒருவனுக்கு முதல் பரிசு கொடுத்துவிட்டான்.காயத்ரி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாள்.

 -0-0-0-

நான் நினைத்தது போலவே உமா காலி.அவளும்,ரமேஷ் பாபுவும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.அவனது பார்வையும்,புளித்த சிரிப்பும் எனக்குப் பிடிக்கவில்லை.

மாமா அவரது ரெண்டு உம்மணாமூஞ்சி மகள்களுடன் வந்திருந்தார்.பாபுவை அழைத்து வரவில்லை.bad luck!ஏதோ  tournamentக்கு திருச்சி  போயிருக்கிறானாம். இன்று சுத்த போர்! 

-0-

இன்று செகண்ட் இயர் பெண் ஒருத்தி காலேஜ் செல்லும் வழியில் தயங்கித்தயங்கி அழைத்து,”அக்கா தப்பா நினைச்சுக்காதீங்க.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.எங்களுக்குள்ள அடிக்கடி உங்களப் பத்தி பேசிக்குவோம்.பேசிட்டு இருக்கும் போதே ரொம்ப லைட்டா நீங்க கண்ண்டிக்கிற ஸ்டைலும் பிரமாதம்” என்றாள்.மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.

-0-

இன்று காயத்ரியின் பிறந்த நாள்.பேசி,சிரித்து வீடு திரும்ப லேட்டாகிவிட்டது.ஏழுமணி தாண்டி வீடு திரும்பினால் அப்பாவை சமாளிக்கமுடியாது என்பதால் பின்பக்கக் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்தேன்.நான் வருவதை கவனித்த அப்பா எதுவும் கேட்காமல்,வாயில் வந்தபடி கேவலமாகத் திட்டிவிட்டார்.இன்றைய நாளின் சந்தோஷமனைத்தும் ஒரே நொடியில் வடிந்து போனது.இவரைப் பற்றிய இந்த நாளின் கோபத்தை எழுதப்போவதில்லை.எழுதினால் குறைந்துவிடும்.மனதிலேயே இருக்கட்டும்.

-0-

உமாவுக்கும் ரமேஷ் பாபுவுக்கும் ஏதோ சண்டை.அப்செட்டில் இருந்தாள்.அப்படியே தொடர்ந்தால் அவளுக்கு நல்லது.பார்ப்போம்.

எதற்கும் ஒத்துவராத கவிதாவும் இன்று எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.கூல் ட்ரிங்ஸ் குடித்துவிட்டு பஸ் ஏறலாமென்று காயத்ரி சொன்னாள்.பார்த்தால் யாரிடமும் பணமில்லை.காயத்ரியிடம் வலிய வந்து செந்தில மாட்டினான்அவனிடம் பத்து ரூபாய் கேட்டாள்.இருபது ரூபாயாகக் கொடுத்து, அரைமணி நேரத்தை ‘இழுஇழு’ என்று இழுத்துவிட்டான்.அவன் விலகியதும் ‘ஜவ் மிட்டாய் ‘ ஒழிந்தான் என்றாள்.வழியெல்லாம் அவனைப்பற்றிப் பேசி,சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

-0-

Farewell day!மனது மிகக் கஷ்டமாக இருந்தது.மாறிமாறிப் பேசிக் கொண்டிருந்தோம்.வெங்கட்,கணேஷ்,டெல்லி பாபு மூவரும் என்னிடமிருந்து விலக மனமில்லாமல் இருந்தார்கள்.எனக்கும் மனமில்லை.கணேஷ் மிகவும் எமோசனலாக இருந்தான்.வீட்டிற்கு கிளம்பவே விருப்பமில்லை.இப்போழுது வரை மனம் ஒரு நிலையில் இல்லை.நாளை?

-0-

உமாவும்,கவிதாவும் அப்ளிகேசன் வாங்கிவிட்டார்கள்.நானும் மேலே படிக்கிறேன் என்று அப்பாவிடம் திரும்பவும் கேட்டுப் பார்த்தேன்.படித்தது போதுமென்று  சொல்லிவிட்டார்.அம்மாவிடம் அழுது பார்த்தேன்.அவளுக்கு விருப்பம் தான்.ஆனால் அப்பாவிடம் பேசமுடியாது என்று சொல்லிவிட்டாள்.எனக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டது.கொஞ்சம் பொறுத்துத் திருமணம் செய்துகொள்கிறேன் என்றால் அவர் கேட்பதாக இல்லை.

-0-

நிர்மலா வந்திருந்தாள்.அவர்களது வீட்டில் ஒத்துவராததால், அடுத்தவாரம் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள்.ஜோசப்பின் நண்பர்கள் எல்லா ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாகவும்,நான்கு தெரு தள்ளி வீடு கூடப் பார்த்துவிட்டதாகவும் கூறினாள்.அவளுக்கு எந்த பிரச்சினையும் வராது என்று தான் நினைக்கிறேன்.ஜோசப்பும் நல்லமாதிரி தான்.

-0-

இன்று என்னைப் பெண் பார்த்தார்கள்.மாப்பிள்ளை சுமாராக இருந்தான்.அவனுடன் அப்பா,அம்மா மற்றும் ஒரு பெரியவரும் வந்திருந்தார்கள்.அப்பா அவனது வேலையைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.கோர்வையில்லாமல் ஏதோ பதிலளித்துக் கொண்டிருந்தான்.நேராக யாரையும் பார்க்காமல்,தயங்கித்தயங்கி ஒரு தினுசாக தலையைச் சாய்த்துக் கொண்டு பேசினான்.அவனது கோணல்மாணலான நடையும்,பார்வையும்,பாவனைகளும் வித்தியாசமாக இருந்தது.அவனை சுத்தமாக எனக்குப் பிடிக்கவில்லை.ஊருக்குப் போய் பதில் சொல்வதாக அவர்கள் கிளம்பினார்கள்.

அப்பாவுக்கு அவனது பேங்க் வேலை பிடித்துப் போய்விட்டது.”அவன் ‘கிறுக்கு’ மாதிரி இருக்கான்.எனக்கு வேணாம்” என்ற  போது,”நல்லது கெட்டது எதுன்னு எங்களுக்குத் தெரியும்.பேசாம உன் வேலயப் போய்ப் பாரு”என்று காட்டுக்கத்தலாக கத்தினார்.வழக்கம்போல் அம்மாவிடம் அழுதேன்.”பசங்க ஆரம்பத்துல அப்படித்தான் தெரிவாங்க.போகப்போக பழகிடும்.உங்கப்பாவே அப்படித்தான்” என்றாள்.சாப்பாட்டுத் தட்டை வீசியெறிந்துவிட்டு வந்து படுத்துக் கொண்டேன்.தூக்கம் வரவில்லை.

-0-

அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தரகர் வந்து சொன்னார்.அப்பாவுக்கு பெருத்த சந்தோசம்.எனக்குப் பயமாக இருந்தது.என்ன செய்வதென்றும் தெரியவில்லை.வரதட்சிணை,சீர் சமாச்சாரங்களை பேச ஆரம்பித்துவிட்டார்கள்.திரும்பவும் அப்பாவிடம் ஆர்ப்பாட்டம் செய்தேன்.வழக்கம்போல் கத்தினார்.கதவை அடைத்துக் கொண்டு அழுதேன்.எப்படி அவனுடன் வாழப்போகிறேனோ? தெரியவில்லை.

-0-

திருமணம் முடிந்துவிட்டது.அதிர்ஷ்டவசமாக,ஒரு வாரம் முன்னதாக இன்று மதியமே எனக்கு ‘மழை’ வந்துவிட்டதால்,சாந்திமுகூர்த்தத்தைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.அவன் எதுவும் என்னிடம் பேசவில்லை.முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்தான்.

-0-

சாந்திமுகூர்த்தம் தள்ளிப் போனதற்கு அம்மாவிடம் கோபித்திருக்கிறான்.எவ்வளவு கேட்டும் விபரங்களை அம்மா கூறவில்லை.

-0-

இன்று சாந்திமுகூர்த்தம்.பதட்டமாகவும்,எரிச்சலாகவும் இருந்தது.அவன் பெரிதாக எதுவும் பேசவில்லை.இரவு தூங்கமுடியவில்லை.அருவருப்பாக இருந்தது.நன்றாக குளித்தேன்.

-0-

இன்று இரவு திடீரென்று,”உனக்கு சிகரெட் பிடிக்கிறவங்களப் பிடிக்குமா? நான் சிகரெட் பிடிக்கமாட்டேன்’என்றான்.

”அது ஆளைப் பொறுத்தது” என்றேன்.அவன் ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் முகம் சுருங்கிவிட்டது.

-0-

இன்று கணேஷும்,வெங்கட்டும் வந்திருந்தார்கள்.வேலை விசயமாக வந்தவர்கள் என்னையும் பார்த்துவிட்டுப் போனார்கள்.வெகுநேரம் பேசினோம்.சந்தோசமாக இருந்தது.

”ஒனக்கு பசங்க கூட பழக்கம் இருக்கா?காலேஜ் படிக்கிறப்ப நான் பொண்ணுங்கட்ட பேசுனதே கெடயாது.இப்பக்கூட ஆபிஸ்ல எந்த பொண்ணு கூடயும் பேசமாட்டேன்”என்றான்.

”எனக்கு பசங்க,பொண்ணுங்க ரெண்டுலயும் ப்ரெண்ட்ஸ் உண்டு”என்றேன்.வழக்கம்போல் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு போய்விட்டான்.

-0-

இன்று ஒரே தலை சுற்றலும்,வாந்தியுமாக இருந்தது.டாக்டரை தனியாகப் போய்ப் பார்த்தேன்.அவன் உடன் வரவில்லை. வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டான்.உண்டாகியிருப்பதை டாக்டர் உறுதி செய்தாள்.திருமணமாகி  மூன்று மாதத்தில் கர்ப்பமாகிவிட்டேன்.

-0-

உமாவின் கடிதம் கிடைத்தது.காலேஜ் மிகவும் ஜாலியாக இருப்பதாகவும்,நானும் காயத்ரியும் இருந்திருந்தால் இன்னமும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றும் எழுதியிருந்தாள்.

குட்டியும்,ரம்யாவும் பிறந்த நாள் கார்டு அனுப்பியிருந்தார்கள்.சீக்கிரமாக ஊருக்குப் போகவேண்டும்.

-0-

அம்மா,ரம்யா,குட்டி மூவரையும் பார்த்ததும் அழுதுவிட்டேன்.அடக்க எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை.அவர்களும் அழுதுவிட்டார்கள்.”நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்.என்னால் அவனுடன் வாழமுடியவில்லை”என்றேன்.”வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு இன்னோர் கல்யாணம் பண்ணிக்கப் போறியா?” என்றார்.”சே என்ன மனிதர்!” இனிமேல் இவர் முகத்தில் முழிக்கக்கூடாது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

-0-

சிசேரியன்.மயக்கமாகவும்,கிறக்கமாகவும் இருந்தது.குழந்தையை எடுத்து என்னிடம் காட்டினார்கள்.”ஆம்பளயா  பொம்பளயா?” என்றேன்.”கொடுத்து வச்சவ.ஆம்பளப் புள்ள தான்” என்றாள் நர்ஸ்.மிகவும் சந்தோசமாக இருந்தது.

-0-

குழந்தை மிகவும் அழகாக இருந்தான்.உறவினர்கள் வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அவன் குழந்தையிடம் எதையோ  தேடுவதுபோல்  பார்த்துக்கொண்டிருந்தான்.அவனது அத்தை பார்த்துவிட்டு,குழந்தை அவனையே உரித்து வைத்திருப்பததாகச் சொன்னாள்.அத்தை வெளியேறியவுடன்,சந்தோசமாகக் குழந்தையைக் கையிலெடுத்து முத்தமிட்டான்.

-0- 

இந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு அவள் எதுவும் எழுதவில்லை அல்லது அவை கிடைக்கப்பெறவில்லை.

                                                                                                      

செப்ரெம்பர் 30, 2008

ஏசப்பா

Filed under: Uncategorized — ஜெய்க்குமார் @ 3:53 பிப

உக்கிரமான வெயில்.சுமைக்கூலிகள் தள்ளுவண்டிகளில் பாரங்களை ஏற்றி இறக்கியும்,தெருவோரக் கடைக்காரர்கள் போவோர் வருவோரைக் கூவியழைத்தும், மாநிலத்தின் பலதிக்குகளிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள் அவசரகதியிலும் உரசி,இடித்து,வேகங்கூட்டி நடந்தோடிக் கொண்டிருந்தார்கள்.வாகன,மனித இரைச்சல்களுடன்,புகை புழுதிப்படலமாய் பகல் பொழுதின் பரபரப்புடனிருந்தது நைனியப்ப நாயக்கன் தெரு.நடப்புலகக் காட்சிகளின் பிரக்ஞையேதுமின்றி மிதிவண்டியில் மிதந்துக் கொண்டிருந்தார் ஏசப்பா.இரண்டு மாதத்திற்கொருமுறை வழக்கமாக நிகழும் நடைமுறைதான்.காசித் தெருவில் பொம்மைகள் வாங்கி,சுமையைக் கேரியரில் வைத்துக்கட்டி மெதுவாக ஊர்ந்து, ‘ராசப்பா’ கடையில் ”டீ” குடித்து, நிதானமான பெசன்ட் நகர் பயணம்.இன்றும் ”டீ” குடித்தாயிற்று.இனிமேல் என்ன?கழுத்தில் தொங்கும் ஐயன் ஏசுவைப் பற்றிய ஏகாக்கிரக சிந்தனையில் இருப்பிடம் போய் சேர்ந்துவிடலாம் தான்.ஆனால் இன்று சற்றே மனச்சஞ்சலம்.

ஏசப்பாவின் பூர்வீகம் அரியலூருக்கு அருகிலுள்ள வேப்பம்பட்டி.அனாதை.வளர்ந்தது கிறிஸ்தவ மடத்தில்;பாதிரியாரின் அரவணைப்பில்.இயேசுகிறிஸ்துவின் மேல் அளவிலா அன்பிலும்,பக்தியிலும் வளர்ந்தார்.பாதிரியின் கண்கள் ஏசப்பாவின் வாலிபத்தை உற்று நோக்கும் வரை எவ்விதக்குறையுமில்லை.கிடைத்த சந்தர்ப்பத்தில் தப்பிப்பிழைத்து பைபிளுடன் சென்னை வந்து சேர்ந்தார்.எங்கெங்கோ சுற்றியலைந்து இறுதியாக வேளாங்கன்னி மாதாவிடம் தஞ்சம்.பகற்பொழுது சர்ச்சிலும்;இரவு கடற்கரையிலும்.கிடைத்ததை உண்டு,பைபிள் வாசித்து,துதிபாடல்கள் பாடிப் பொழுது கழிந்தது.தர்ம சிந்தனையாளர்கள் புண்ணியத்தில் கிடைத்த சொற்ப பணத்தில் பொம்மை வியாபாரம்.சர்ச்சை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் முளைத்து ”திடீர் நகர்”உருவானபோது ஏசப்பாவும் குடிசையொன்றை ஏற்படுத்திக் கொண்டார்.

மாலைவேளைகளில் சர்ச்சருகில் மூன்று மணிநேர வியாபாரம்.மற்ற பொழுதுகளில் குடிசை வாசலில் தவம்.சதா இயேசுபிரானின் சிந்தனை.எப்போதாவது சிறிது சாப்பாடு.உறக்கம்.நான்குமுழ காவி வேட்டி,கழுத்தில் இயேசு கிறிஸ்துவின் திருஇருதயப்படம்,இடுங்கிய கண்கள்,கன்னத்தாடைகளில் அடர்ந்து படர்ந்திருக்கும் ரோமங்களுடன் குப்பத்து முனிவராகவே வலம் வந்தார்.நாற்பத்துச் சொச்ச ஆண்டுகளாக பிரம்மச்சர்யம்.உணவே படாடோபம் எனும் போது லௌகீக விஷயங்களில் ஏது சிந்தனை?

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவ,சிறுமியர்களுக்கு இயேசுபிரானின் போதனைகள்.உற்சாகம் மேலிட்டால் பாட்டு.”உன்னதங்களிலே ஓசான்னா”.பக்திப் பரவசத்தில் கண்களில் நீர் கசிந்தோடும்.முடிவில் யேசுவின் நாமத்தால் குழந்தைகளுக்கு பொம்மைகளும்,பட்சணங்களும். பிரசங்கம் முடியும் வரை எவரும் நகரமாட்டார்கள்.சாத்தானின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பதற்காகவே தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும்,தேவனின் அழைப்பும்,திட்டமும் இதுதான் என்பதையும் உணர்ந்தார்.ஒன்பதாவது படிக்கும் கவிதாவும்,அவளது தம்பி தனசேகரும் இன்னும் நான்கைந்து சிறுவசிறுமியரும் ஏசப்பாவின் சிஷ்யகோடிகளாயினர்.

ஏசப்பாவின் பக்திமார்க்கத்தில் கவிதாவின் அர்ப்பணிப்பு மற்ற எவரையும் விட தீவிரமாகவே இருந்தது.நிதமும் இரண்டு மணி நேரம் ஏசப்பாவுடன் சேர்ந்து ஜெபம்.உறங்குவதற்கு முன் மண்டியிட்டுப் பிரார்த்தனை.சாத்தானுடன் மன்மதன் கைகோர்த்துக் கொள்ளும் வரையில் பக்திப்பாதையில் சிக்கலேதுமில்லை.என்னதான் ஜெபமாலையெனும் ஆயுதமும்,ஆன்மபெலமென்ற கேடயமும் வைத்திருந்தாலும் சாத்தானை என்ன செய்துவிடமுடியும்?அதுவுமன்றி இதுவொன்றும் பரலோகமன்றே.கொஞ்சநாட்களாகவே, பாதாதிகேசம் முழுவதும் பக்கத்து வீட்டு மணிகண்டனே வியாபித்திருந்தான்.சற்றே ஓரத்தில் இறைவன்.

ஊரும்,உலகும் அறிவதற்கு முன்பே கவிதாவிடம் ஏற்பட்ட மாறுதல்களை ஏசப்பா தன் ஞானக்கண்களால் கண்டுணர்ந்தார்.கண்ணீர் கசிந்துருக மண்டியிட்டு இறைவனிடத்தில் வேண்டினார்;கதறினார்.கவிதாவை குடிசையில் இருத்தி சாத்தான் அவளை விட்டு விலகுவதற்கான சங்கீதங்களையும்,மந்திரங்களையும் உச்சாடனம் செய்தார்.கவிதாவையும் தீவிரமாக ஜெபிக்கச் செய்தார்.ஏசப்பாவிடம் இருக்கும்போது இறைவனும்,விலகும் போது சாத்தானும் விடாமல் மாறிமாறி அவளைத் துரத்தினர்.

கவிதாவைப்பற்றிய நினைப்பிலேயே மிதிவண்டி இருப்பிடத்தை அடைந்தது.இறைவழியில் திருப்பும் நோக்கில் அவளது வீடு நோக்கி விரைந்தார்.ஜெபிப்பதற்கு தன் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தார்.எவ்வளவு கட்டாயப்படுத்தியும் அவள் வருவதாகயில்லை.’சாமி அப்பறமா வரேன்’ என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.ஏசப்பாவும் வேறு வழியின்றி,அவளது அப்பனிடம் ‘விஷயத்தை’ச் சொல்லப் போவதாக தனது கடைசி அஸ்திரத்தை வீசினார்.கோபமாக முறைத்துக்கொண்டே கதவை மூடினாள்.

மனம் நொந்து குடிசைக்குத் திரும்பி கண்கள் மூடிய நிலையில் தனது இறைவனிடம் மன்றாட ஆரம்பித்தார்.நேரத்தைப்பற்றிய உணர்வின்றி ஆழ்ந்த பிரார்த்தனை.திடீரென்று அவரருகில் சலசலப்பும், சுதாரிப்பதற்குள் அடி,உதை,குத்துகளும் சரமாரியாக விழுந்தன.”இன்னொரு வாட்டி பொட்டைப்புள்ளைங்க பக்கம் உன்ன பாத்தா அவ்வளவு தான். கொடல உருவி மாலயாப் போட்ருவோம்” சொல்லிக்கொண்டே கும்பல் கலைந்தது.

ஏசப்பாவுக்கு நகர்வதே சிரமமாக இருந்தது.சரியான அடி.அவரது உடலையும் கந்தலாக்கிவிட்டிருந்தார்கள்.தட்டுத்தடுமாறி குடிசைக்குள் நுழைந்து,கையில் சிக்கிய கயிற்றையெடுத்து தூக்கில் தொங்கிவிட்டார்.

ஓகஸ்ட் 11, 2008

மாம்பழம்

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 11:15 முப
Tags:

1

நள்ளிரவைக்கடந்த சாமம்.கதிரேசன் தத்துவவெளியில் இலயித்திருந்தார்.தாம்பத்ய உறவு இல்லாதபோது சிறிது தத்துவம் போலும்!கதிரேசனின் இல்லறவாழ்வில் மூன்று நான்கு மாதங்களுக்கொரு முறை வழக்கமாக நிகழும் சாதாரணக் குழப்பம் தான்.இன்று நான்காவது நாள்.அதிகபட்சம் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள்ளாக சமரசம் ஏற்பட்டுவிடக்கூடும்.சராசரியின் விதி!அதன்பின் இல்லறம் தழைத்தோங்கும்.தாம்பத்ய உறவெனும் ஆணிவேர் இருக்கும்வரையில் ஆயிரங்காலத்துப் பயிருக்கென்ன கவலை!இது போன்ற இல்லற இடைவெளிகளின்போதும் நெடுந்தூரப் பயணங்களின்போதும் புத்தங்களிலோ அல்லது அகத்தேடலிலோ ஈடுபடுவார்.

முதல் இரண்டு நாட்கள் புத்தகக்கடலில் இன்பகரமாக நீந்தினார்.மூன்றாவது நாள் தடுமாற்றம்.மூச்சுத் திணறல்.மிகுந்த சிரமத்துடன் ‘கரை’யேறி உறங்கிப்போனார்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது,புத்தகங்கள் எம்மாத்திரம்?இன்று இரவு அவரையுமறியாமல் மனம் தத்துவத்திற்கு தாவியது.எப்போதும்போல்,வானவெளியில் ஆரம்பித்து, ஒளியின் வேகத்தில் தரைக்குத் திரும்பினார். கோடானுகோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சத்தின் ‘சிறுதுகள்’ நான், என்றவாறு தனது சிந்தனையைத் தொடர்ந்தார்.

‘பொய்களும் போலித்தனங்களும் இல்லாமல் இவ்வுலகில் வாழமுடியாதா.பாசாங்குகளின்றி எதுவும் சாத்தியமில்லையா.அறம்,நேர்மை,உண்மை இவையெல்லாம் சிலாகிதத்திற்கு மட்டுந்தானா?இம்மந்தைக் கூட்டத்தில் இயங்க நமது மரபுக்காரணிகளே அவ்விதம் தான் பரிணமித்துக் கொண்டுள்ளனவா?’கேள்விகள் தொடரத்தொடர, தன்னிலை மறந்து பரவசமானார்.முகத்தில் ஒளிப்பிரவாகம்!

‘அண்டசராசரங்களை அரை நாழிகையில் வலம் வரும் கதிரேசனின் மனமெங்கே!சாமியார்மடத்துக் குரங்கெங்கே!’நான் யார்? என்ற மகத்தான கேள்விக்குப் பறந்தார்.

‘இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களைப்போன்றே மனிதனும் வெறும் இராசயனக்கலவை தானோ?உண்டு,கொழுத்து,ஈன்று,சாதல் மட்டுந்தான் மனித வாழ்வோ?’விடை தெரியாக் கேள்விகள் பலவற்றின் கிறக்கத்துடன் உறங்கிப்போனார்.

2

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கதிரேசன் நிதானமாகவே விழித்தார்.காலை உணவு மேசையில் தயாராக இருந்தது.மௌனமான நல்லறம்!உலகில் ஆண்டாண்டு காலமாக இயங்கிவரும் இந்த வசதியான ஏற்பாட்டை கதிரேசனின் குடும்பத்தால் மட்டும் சிதைத்துவிட முடியுமா என்ன! 

குளித்து,உணவுமுடித்து வாசற்கதவைத் திறந்தவாறே பற்ற வைத்தார்.சிரித்தால்,மகிழ்ந்தால்,பேசினால்,சிந்தனையில் லயித்தால் அடுத்த கணம் அவரது உதட்டில் சிகரெட் அமர்ந்துவிடும்.இருபத்தைந்து வருட உறவு.பதினாறு ஆண்டுகளாக அவரது மனைவி எவ்வளவு முயற்சித்தும் பயனில்லை.மற்றபடி அவரது  மனைவியைப் பொறுத்தமட்டில் கதிரேசன் நல்லவர் தான்!

சாலையில் மூன்று கால் நாயொன்று குரைத்துக்கொண்டே ஓடியது.பிறக்கும்பொழுதே மூன்று கால் தான் போலும்!சைக்கிளை யார் முதலில் ஓட்டுவது என்று இரு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.விடுமுறை தினத்தைக் கழிப்பதற்கே வழியில்லாதபோது,மூன்று கால் நாய் போனாலென்ன!ரெண்டு கால் பொடியன்கள் வண்டி ஓட்டினாலென்ன!கதிரேசனின் கண்கள் மட்டும் சாலையில் நிலைபெற்றிருந்தன.

”ம்..மாம்பழம்… பங்கனப்பள்ளி,செந்தூரா..ம்..மாம்பழம்”

மாம்பழச்சொல் வந்த திசையில் கண்கள் ஆர்வமாய் திரும்பின.பங்கனப்பள்ளி என்ற சொல் மூளையைச் சேர்ந்ததும் ஆர்வம் வடிந்து போனது.அவரது அகராதியில் பங்கனப்பள்ளி மாம்பழமே அல்ல!

விளையும் பயிர் முளையிலே தெரியுமோ இல்லையோ கதிரேசனது மாம்பழப்பித்து  தெரிந்தது.அதனால் சிறுவயதில் அவரது பெயரே ‘மாம்பழம்’ தான்!

பொழுதுபோக்க வழி கிடைத்த உற்சாகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சந்தோஷமாகக் கிளம்பினார்.

3

எங்கு பார்த்தாலும் போத்தீஸ்,சரவணா,சென்னை சில்க்ஸ்பைகள்.ஆங்காங்கே சில பெயர் தெரியாப் பைகளும்.மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றார் என்று நாம் சொல்லலாம் தான்! சென்னை வெயிலில் இடிபட்டு,மிதிபட்டுக் கசங்கி மார்க்கெட்டுக்குள் நுழைந்த கதிரேசனுக்கல்லவா தெரியும்.

மல்கோவா-அல்போன்சாக்கள் வரவேற்ற ஒரு கடையில் விசாரித்தார்.சொன்ன விலை சற்று அதிகமாகப் பட்டது.மனைவி எப்பொழுதும் அவரை விடக் குறைந்த விலையில் வாங்கிவிடுவதால் ஏற்பட்ட சந்தேகந்தான்!

சற்றுத் தள்ளி எதிரிலிருந்த கடைக்குச் சென்றார்.அங்கும் கூட்டம் தான்.இருபது வயது மதிக்கத் தகுந்த வாலிபன் மும்முரமாக வியாபாரத்திலிருந்தான்.

”மல்கோவா என்ன வெலப்பா?”

”நாப்பது ரூவா சார் கிலோ”

”எதித்த கடையிலேயே முப்பது ரூவா தா ங்கறான்!நீயென்ன நாப்பதுங்கற!”

”எந்தக் கடையில ஒனக்கு முப்பது ரூவாய்க்குத் தர்றான்?”

”அதோ பெரியவர் நிக்கிறாரே அந்தக் கடை தான்”

”போய்யா அந்தாண்ட” கதிரேசனை கைகளால் விரட்டிக் கொண்டே கோபத்துடன் கத்தினான்,”பெரிய்ய மனுசனாட்டம் கீர.பத்து ரூவாய்க்கு போய் பொய் சொல்ற.அந்த கடையும் ஏங் கடை தான்.போ!போ!”

வாலிபனின் குரல் தேய்வதற்கு முன்பே கதிரேசன் அவ்விடத்திலிருந்து அந்தர்தியானமானார்.

ஜூலை 25, 2008

இலக்கணம்

Filed under: இலக்கணம் — ஜெய்க்குமார் @ 12:35 பிப

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆர்வம் அல்லது வியாதி.சமீப காலமாக இலக்கணம்.பள்ளி நாட்களில் வார்த்தைகளைப்  பிரித்தெழுதியும்சேர்த்தெழுதியும்,பெருமதிப்பிற்குரிய கோனார் அவர்களின் உதவியுடன் இடம் சுட்டிப் பொருள் விளக்கங்கள் தந்து மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்,குற்றியலுகரம்,கூவிளங்காய் போன்ற பல சொற்களின் அர்த்தங்களும்,உபயோகங்களும் இரண்டு மாதத்திற்கு முன்பு வரை விளங்கவில்லை.கருமமே கண்ணாயிருந்து இலக்கணத்தை அறியவிடாமல் செய்த எனது தமிழாசிரியர்களுக்கும்,தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழ் இலக்கணத்தின் எனது புரிதல்களை சுருக்கமாகவும்,தெளிவாகவும் வரும் நாட்களில் தொடர்ச்சியாகத் தரமுயற்சிக்கின்றேன்.எனது விளக்கங்களில் சொற்குற்றமோ,பொருட்குற்றமோ இருப்பின் மூலகர்த்தாக்களான தொல்காப்பியரையும்,பவணந்தி முனிவரையும் கீழ்கண்ட அலைபேசி எண்ணில் மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்;999999999999

எழுத்து

தமிழ் மொழியில் இருக்கின்ற ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்ற வடிவங்கள் எழுத்து எனப்படும்.

தமிழ் எழுத்துகள் மொத்தம் 247.அதாவது இருநூற்றிநாற்பத்தியேழு விதமான ஒலிகள்.

உயிரெழுத்துகள் அ முதல் ஔ வரை 12.

மெய்யெழுத்துகள் க் முதல் ன் வரை 18.அவற்றில்

க்,ச்,ட்,த்,ப்,ற் -வல்லின மெய்கள்.உச்சரிப்பதற்கு வன்மையான ஒலி கொண்டவை.

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் -மெல்லின மெய்கள்.மென்மையான ஒலி.

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் -இடையின மெய்கள்.வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்ட ஒலி.

உயிரும் மெய்யும் இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகள் க முதல் னௌ வரை 216. (க்+அ =க,க்+ஆ= கா……….). 12*18 =216.

ஆய்த எழுத்து,முப்பாற்புள்ளி,தனிநிலை என்றழைக்கப்படுகிற ஃ . ஆக மொத்தம் 247.

எழுத்தை உச்சரிப்பதற்கான கால அளவு மாத்திரை’ என்ற அலகால்(unit) கணக்கிடப்படுகிறது.கண்ணிமைக்கும் பொழுதில் உச்சரிக்க முடிந்தால் அது ஒரு மாத்திரை.

குறுகிய நேரத்தில் உச்சரிக்கக்கூடிய எழுத்துகள் குறில்.நீண்டு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் நெடில்.

குறிலுக்கு ஒரு மாத்திரை.நெடிலுக்கு இரண்டு மாத்திரை.

அ,இ,உ,எ,ஒ முதலான எழுத்துகள் ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ முதலான எழுத்துகள் இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும். 

ஆய்த எழுத்துக்கும்,மெய் எழுத்துகளுக்கும் அரை மாத்திரை.

உயிர்க்குறிலுடன் இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளும் குறில்களே.( க்+அ= க,க்+உ=கு, ச்+ஒ= சொ……..).அவற்றிற்கும் ஒரு மாத்திரை.

உயிர் நெடிலுடன் இணைந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகள் நெடில்.( க்+ஈ=கீ, ப்+ஊ= பூ………..).அவற்றிற்கு இரண்டு மாத்திரை. போ என்ற எழுத்து அல்லது சொல்லை உச்சரித்து முடிக்கும்போது இருமுறை உங்களது கண்களை இமைக்க முடிந்திருக்க வேண்டும்.அவ்வாறில்லையெனில் அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்று உங்கள் கண்களைப் பரிசோதித்துவிடுவது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. 

தமிழ் எழுத்துகள் இரண்டு வகை; முதலெழுத்துகள்,சார்பெழுத்துகள்.

முதலெழுத்துகள்

உயிரெழுத்துகள் 12ம் மெய்யெழுத்துகள் 18ம் முதலெழுத்துகளாகும்.இந்த எழுத்துகளின் ஒலிகளே தமிழ் மொழிக்கு முதன்மையானதாலும்,ஆதாரமானதாலும் இவை முதலெழுத்துகள்.

சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளைக் கொண்டு உருவாகும் எழுத்துகளும்,அவற்றைச் சார்ந்து இயங்கக்கூடிய எழுத்துகளும் சார்பெழுத்துகள்.அவை;

1.உயிர்மெய் எழுத்துகள்; உயிரும் மெய்யும் இணைந்து உருவாகும் எழுத்துகள்.

2.ஆய்த எழுத்து; இவ்வெழுத்துகள் இரண்டு எழுத்துகளுக்கு இடையில் மட்டுமே வரும்.ஆய்த எழுத்து சொல்லில் வரும்பொழுது தனக்கு முன் ஒரு குறிலையும்,தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்தையும் பெற்று வரும்.

எ.கா; எஃகு, அஃறிணை.  இந்த சொற்களில் எ,அ என்ற இரண்டு எழுத்துகளும் குறில்கள்.கு, றி என்ற இரண்டு எழுத்துகளும் வல்லின உயிர்மெய்கள்.

 ”சில எழுத்துகளின் சிறப்புப் பண்புகள்”

எழுத்துகள் சொற்களில் வரும்பொழுதும் தங்களது இயல்பான ஒலியளவிலேயே ஒலிக்கும்.அது போலல்லாமல் சில எழுத்துகள் சில இடங்களில் தங்களது ஒலியளவிலிருந்து குறைந்தோ,நீண்டோ ஒலிக்கும். குறிப்பாக ஐ, ஔ, ஃ, உ ,இ, ம் போன்ற எழுத்துகள் சில இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் குறைந்தும் ஒலிக்கும் தன்மையுடையவை.இது போக புலவர்கள் செய்யுளின் அதாவது பாட்டின் ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு சில எழுத்துகளை உடன் சேர்ப்பர்.

போட்ட்டு வைத்தக் காதல் திட்டம் ஓகே கண்மணியில் அடுத்தடுத்து வருகிற இரண்டு ட் போல.

இது போன்ற சிறப்பியல்பினைப் பெற்ற எழுத்துகளையும் சார்பெழுத்துகள் என்றே வகைப்படுத்துகின்றனர்.எனினும் அவற்றிற்கு இயல்பாய் அமைந்த எழுத்து வடிவத்தைத் தவிர வேறு வடிவம் கிடையாது.

இவை மொத்தம் எட்டு உள்ளன.

1.குற்றியலுகரம்

2.குற்றியலிகரம்

3.ஐகாரக்குறுக்கம்

4.ஔகாரக்குறுக்கம்

5.ஆய்தக்குறுக்கம்

6.மகரக்குறுக்கம்

7.உயிரளபெடை

8.ஒற்றளபெடை

ஐகாரக்குறுக்கம்

எழுத்துகளைக் குறிப்பிடும் போது கரம்,காரம்,கான் போன்ற சாரியைகளைச் சேர்த்துக் குறிப்பிடுகிறோம்.உயிர் குறில் எழுத்துகள் கரம் என்னும் சாரியை பெறும்.உயிர் நெடில் எழுத்துகள் காரம் எனும் சாரியை பெறும்.சாரியை என்றால் என்னவென்று பிறகு விளக்குகிறேன்

ஐ,ஔ என்ற இரண்டு நெடில்களும் காரம் என்னும் சாரியை பெறுவதுடன் கான் சாரியையும் பெறும்.அதனால ஐ யைப் பத்தி சொல்லும்போது ஐகான் இல்லாவிட்டால் ஐகாரம் என்றே செப்பவேண்டும்.

குறுக்கம் என்றால் இந்த இடத்தில் குறுகி ஒலிப்பது என்று பொருள்.

அதனால் ஐகாரக்குறுக்கம் என்றால் ஐகாரம் தனக்குரிய ஒலிக்கும் அளவான இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது.

ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும் பொழுது மட்டுமே அது இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும்.அதாவது நீங்க ஒண்ணாப்பு படிக்கும் போது அ,ஆ….எ,ஏ,ஐ,ஒ,ஓ,.ன்னு சொன்னப்பவும் LKG யோ UKGயோ படிக்கிற உங்க குழந்தைக்கு அ,ஆ….ஔ சொல்லித்தரும்போது மட்டுமே இரண்டு மாத்திரை அளவில் உச்சரித்திருப்பீர்கள்.

மற்றபடி பேசும் போது ஒரு மாத்திரை அளவிலோ ஒன்றரை மாத்திரை அளவிலோ தான் உச்சரித்திருப்பீர்கள்.

மொழிக்கு முதலில் அதாவது சொல்லுக்கு முதலில் ஐகாரம் வந்தால் ஒன்றரை மாத்திரை.சொல்லுக்கு இடையிலோ கடையிலோ வந்தால் ஒரு மாத்திரை.

ஐயா -இதில் ஐகாரத்திற்கு ஒன்றரை மாத்திரை.

தலை,தேயிலை -இவற்றில் ஐகாரத்திற்கு ஒரு மாத்திரை.

ஐயா என்ற சொல்லை எழுதும்போது அய்யா என்றும் எழுதுகின்றோம். அ -ஒரு மாத்திரை, ய் – அரை மாத்திரை, யா – இரண்டு  மாத்திரை.ஆக, அய்யா என்ற சொல்லை உச்சரிப்பதற்கான கால அளவு மூன்றரை மாத்திரை.ஐயா என்ற சொல்லில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையாக இருந்தால் உச்சரிப்பதற்கு நான்கு மாத்திரை கால அளவாக ஆகியிருக்கும்.

அதனால் மொழிக்கு முதலில் ஐகாரத்திற்கு ஒன்றரை மாத்திரை மட்டுமே.

விளைச்சல்,பாதை,தலையணை,பூனை போன்ற சொற்களை உச்சரிக்கும்போது ஐகார உயிர்மெய்களின் மாத்திரையளவு குறைந்து ஒலிப்பதை உணரமுடியும்.உணரமுடியாவிட்டாலும் அது அப்படித்தான்.

பல ஒலிகளைச் சேர்த்து தொடர்ச்சியாக ஒலிக்கும்போது இது போன்ற ஒலி மாறுபாடுகள் தோன்றும்.

……தொடரும்.

மார்ச் 20, 2008

பயணம்

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 12:19 பிப
Tags:

மிஸ்டர் சிவா சென்னை வந்து மூன்று வருடங்களானாலும் எக்மோர் ஸ்டேசனை மிதிப்பது இது தான் இரண்டாவது முறை.எக்மோர் என்றில்லை ரயிலில் பயணிப்பதும் இரண்டாவது முறை தான்.ரயில் நிலையத்தின் விதிகளும்,நடைமுறைகளும் அவருக்குப் பிடிபடாததால் பெரும் சிரமத்திற்குப் பிறகே தனது இருக்கையைச் சென்றடைந்தார். சூட்கேஸை இருக்கையில் வைத்துவிட்டு பதற்றத்துடன் சற்று தூரமாக அமர்ந்திருந்தவரிடம் அது வைகை எக்ஸ்பிரஸ் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

சிவா கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாமாண்டு மாணவர்.நியூட்டனின் விதிகளை அறிந்த அளவுக்கு உலக விஷயங்களில் அவ்வளவு ஞானம் கிடையாது.விதிகளும் விதிகள் என்ற அளவில் மட்டுமே அவருக்குத் தெரியும்.விடுமுறையைக் கழிக்க சொந்த ஊரான தெத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஊரின் முதல் இஞ்சினியர் என்ற பெருமிதம் அவருக்கும் அவரது பெற்றோருக்கும்.மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்த செய்தி அறிந்ததும் சிவாவின் தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவந்தார்.இரண்டு டாக்டர்களையும்,ஒரு கலெக்டரையும்,சில ஆசிரியர்களையும்,பலவிதமான அம்மா அப்பாக்களையும்,அண்ணன் தம்பிகளையும் உருவாக்கிய பிரதேசம் முதன்முறையாக ஒரு இஞ்சினியரையும் உருவாக்கியது.

மிஸ்டர் சிவாவின் தந்தை ராமசாமி மூப்பனார் ஊரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.என்றாலும் கொள்ளாயிரம் என்றோ கொல்லாயிரம் என்றோ அழைக்கப்பட்டார்.’ஆயிரம் இருந்தாலும்’ என்ற வார்த்தைகள் அவரது உரையாடலின் ஓர் அங்கமாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட குணப்பெயரோ அல்லது பண்புசார் பெயரோ!அவ்வாறு விளிக்கப்பட்டாலும் மரியாதை கலந்த தொனியிலேயே அழைக்கப்பட்டார்.

அவரது உடலுக்கும் பொருளுக்கும் விவசாயம். ஆவிக்காக ஆன்மாவிற்காக உபதொழிலாய் ஜோசியம்.தொழில் என்று கூடச் சொல்ல முடியாது.தொழில் என்றால் லாபமோ,நஷ்டமோ இருக்கவேண்டும் என்பது நியதியல்லவா? ஜோசியம் பார்க்க வருபவர்களிடம் சன்மானமோ,வெகுமதியோ பெறமாட்டார்.தெத்துப்பட்டி சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற மரியாதை மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

வெள்ளிக்கிழமை அவருக்கும் ஊர் மக்களுக்கும் விசேஷமான நாள்.கொள்ளாயிரத்தார் ஜோசியம் பார்க்கும் நாள் என்பதால் ஏற்பட்ட முக்கியத்துவம்.வெள்ளியானால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து வெள்ளாடை அணிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டு பூஜைகளை முடித்து பரவசமான நிலையில் மணையில் அமரும்போது தெய்வீகமாகக் காட்சியளிப்பார்.மணையில் அமர்ந்துவிட்டால் ‘ஆயிரம் இருந்தாலும்’ போன்ற அற்பமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து உதிர்வதில்லை.குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் மணை வாசம்.இயல்பான ராமசாமி மூப்பனாரை தரிசிக்க வேண்டுமாயின் மணையிலிருந்து இறங்கிய பிறகே வாய்க்கும்.

கொள்ளாயிரத்தாருக்கு முதலில் பிறந்த இரண்டும் பெண் பிள்ளைகள்.கடைசியாக ஆண் வாரிசாக மிஸ்டர் சிவா.சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை.சூட்கேஸை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்தன.இருந்தபோதிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலரே அந்தப் பெட்டியில் இருந்தார்கள்.இந்தக்காலத்தைப் போல் அந்த நாள்களில் ரயிலில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கவில்லை.மிஸ்டர் சிவாவுக்கு எதிர்ப்பக்க ஜன்னலோர இருக்கையில் முப்பது வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணும் அவருக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி ஒரு வயதானவரும் இருந்தனர்.

ரயில் நகர ஆரம்பித்தது.பெண்ணை வழியனுப்ப அவரின் அம்மா,அப்பா,அண்ணன் மூவரும் வந்திருந்தார்கள்.பெண்ணும்,அம்மாவும் விழிகளில் நீர் திரள விடை பெற்றுக்கொண்டார்கள்.இந்த சம்பவங்கள் எதுவும் சிவாவின் கண்களில் படவில்லை.பயண அலுப்பைக் குறைப்பதற்காக ரயில் நிலையத்தில வாங்கிய பாக்கெட் நாவலை வாசிக்கத் துவங்கியிருந்தார்.பக்கத்து அறை நண்பனின் சகவாசத்தால் கிடைத்த ஞானமிது.

எழுத்தின் வெளியில் மிதக்கலானார்.

வினோத் டம்பப்பையை ஜிப்ஸியின் பின்புறத்தில் எறிந்து,ரேபானை கண்களில் அணிந்து,எஞ்சினுக்கு உயிரூட்டும் போது எதிரில் அமர்ந்திருந்த பெண் புக்ஸ் நிறையா படிப்பீங்களா? என்றாள்.

இல்லங்க டிராவல் பண்ணும்போது எப்பவாவது படிப்பேன்.ஜன்னலோரப் பெண்ணைப் பார்த்தும் பாராமல் பதிலளித்துவிட்டு புத்தகத்தில் கண்களை நிறுத்தினார்.

பெண்ணின் முகத்தில் பேசுவதற்கான ஆர்வம் இருந்தது.ஐந்தரை அடி உயரம்.காட்டன் சாரி அணிந்திருந்தாள்.உற்சாகமான முகபாவம்.உதறித்தள்ள இயலாத அழகு.வேகமாய் நகர்கின்ற வெளியில் எவ்வித சலனமுமின்றி அவளது விழிகள்.

சிவாவின் பக்கமாய் விழிகளைத் திருப்பி என்ன பண்றீங்க?காலேஜ் படிக்கிறீங்களா? என்றாள்.

கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல பி.இ தேர்ட் இயர்ங்க.மிஸ்டர் சிவாவுக்கு தயக்கம் விலகவில்லை.

அளவாத்தான் பேசுவீங்களா? இல்ல பொண்ணுங்கட்ட பேசுறதல கூச்சமா?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க.லேசாக சிரித்துக் கொண்டே புத்தகத்தை மூடினார்.

லீவுக்கு ஊருக்கு போறீங்களா? எந்த ஊரு?

ஆமாங்க.திண்டுக்கல்.நீங்க?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சைதாப்பேட்ல தாங்க.எங்கப்பாவுக்கு டெலிபோன் எக்சேஞ்ச்ல வேல.எங்க வீட்ல என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர்.நாந்தான் கடைக்குட்டி.எட்டு மாசத்துக்கு முன்னால தான் எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க.அவர் சென்ட் ஜோசப் கலேஜ்ல லெக்சரா இருக்கார்.உங்க வீட்ல?

எங்களோடது விவசாயக்குடும்பம்.நாங்க மொத்தம் அஞ்சு பேருங்க.நானும் வீட்டுக்கு கடசி தான்.எங்கப்பாவுக்கு ஊர்ல நல்ல மரியாதைங்க.பஞ்சாயத்து பிரசிடென்ட்டா இருக்கார்.பெருமிதத்துடன் சொன்னார்.

அப்பா கிளர்க்ங்கறதுனால வருமானம் குறைச்சலா இருந்தாலும் எங்க வீடு கூத்தும் கும்மாளமுமா இருக்கும்.அதுவுமில்லாம வீட்டுக்கு ஒரே பொண்ணுங்கறதால ரொம்பச் செல்லம்.

பெண் தேநீர் வாங்கித்தர இருவரும் அருந்தினர். 

என்னோட புகுந்த வீட்டுக்கும்,பொறந்த வீட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லங்க.மாமியார் விருப்பப்படி தான் வீட்ல எல்லாமே நடக்கும்.அவங்க வச்சது தான் சட்டம்.சிரிச்சுப் பேசுறதோ சத்தமாப் பேசுறதோ அவங்களுக்கு சுத்தமாப் பிடிக்காது.வீட்டுக்கு யார் வந்தாலும் நான் ஹால்ல இருக்கக்கடாது.உள் ரூமுக்கு போயிரணும்.மொதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க.இப்ப ஓரளவுக்குப் பழகிடுச்சு.

ரயில் விரைந்து கொண்டிருந்தது.

கொள்ளாயிரத்தாருக்கு அவரது பத்தொன்பது வயதில் திருமணம்.பக்கத்து ஊர் பெரிய மனிதரான பெரியசாமி மூப்பனாரின் சௌந்தர்ய புத்திரி லஷ்மி அம்மாளை மணந்து கொண்டார்.லஷ்மி அம்மாள் பெயருக்கேற்றார் போல் லஷ்மிகரமாகவும் மங்களகரமாகவும் இருந்தார்.இருந்தென்ன? சீர்,செல்வம்,தாம்பத்ய இன்பத்தைக் கொடுத்தால் ஆயிற்றா?

மழலைச் செல்வம் எட்டாக்கனியாக இருந்தது. கொள்ளாயிரத்தாரால் அவரது ஆண்மையை அவரின் சமூகத்தாரிடம் பறைசாற்ற முடியவில்லை.ஆண்மையை நிலைநாட்ட லஷ்மி அம்மாளுக்கு அடியும் உதையும்,ஏச்சும் பேச்சும் உபரியாக மலடிப் பட்டமும்.

எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு லஷ்மி அம்மாள் கருத்தரித்தார்.பிரசவத்தின் போது ஏற்பட்ட ஏதோவொரு கோளாறு.உலகத்தைப் பார்க்காமலே சேயும்,லோக கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தாயும் பரலோகம்.

அடுத்த வருடம் கொள்ளாயிரத்தாருக்கு மறுமணம்.பத்தே மாதத்தில் குழந்தை.கொள்ளாயிரத்தாருக்கும் அவர் மேல் அவருக்கே இருந்த சந்தேகம் விலகியது.அடுத்தடுத்து மேலும் இரண்டு குழந்தைகள்.பொருட்செல்வமும் பெருகியது. 

ரயில் திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.

திருச்சில உங்க வீட எங்க இருக்கு? மிஸ்டர் சிவா கேட்டார்.

தில்லை நகர்ல.

என் ப்ரெண்டு வீடும் தில்லை நகர்ல தாங்க இருக்கு.

நீங்க திருச்சிக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வர முடியாது.ஏன்னா இப்ப இறங்கிறப்பக்கூட போய்ட்டுவர்ரேன்னு சொல்லிட்டுப் போகமுடியாதுங்க.என்னக் கூட்டிட்டுப் போறதுக்கு எங்க வீட்டுக்காரர் வந்திருப்பாரு.பாத்தா சந்தேகப்படுவார்.தப்பா நினைச்சுக்காதீங்க.

ரயில் திருச்சி சந்திப்பில் நின்றது. சூட்கேஸை எடுத்துக்கொண்டு தன்னை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவனை நோக்கி நடந்தாள்.

ஜனவரி 31, 2008

எழுதுபவனின் எழுத்து

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 11:03 முப
Tags:

தமிழ் கூறும் நல்லுலகத்தால் ஆ.ஜெ.என்றழைக்கப்படுகிற எழுத்தாளர் ஆதவ் ஜெய்க்குமார் ”துணை” இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில்,எனது கதைகளில் தமிழைவிட ஆங்கிலமும்,வடமொழிச்சொற்களும்,என் தாய் மொழியான மலையாளமும் தான் மேலதிகமாகக் காணப்படுவதாகவும்,தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழ்த்தாயின் கற்பை சூறையாடுவதற்குப் பதிலாக இந்தியிலோ,மலையாளத்திலோ நான் எழுதுகின்ற குப்பைகளைக் கொட்டினால் தமிழுக்கு நான் செய்கின்ற மிகப் பெரிய சேவையாக இருக்குமென்றும்,அதற்கும் மேலாக நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் உலகமே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது போலவும் பதிலளித்திருந்தார்.

கண்களில் தீட்சண்யமும்,முகத்தில் தேஜஸும்,நாவில் சரஸ்வதியும் குடியிருப்பதாக சுய விளம்பரத்தின் மூலம் தமிழர்களின் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்ட ஆ.ஜெ. அது சரி ஆஜே தமிழ் தானா?  ஆதவன்  வெற்றிக் குமரன் என்றோ சூரிய வெற்றிக் குமரன் என்றோ பெயரை வைத்துக் கொள்ளலாம் தானே?

இந்த ஆ.ஜேக்களோ,ஆ.ஜோக்கர்களோ பெயரை மாற்றவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று என் சக எழுத்தாளர் நாகராஜன் போன்றோர் சொல்லித் தெரிந்து கொள்ளும் நிலையிலும் நான் இல்லை என்றவாறு நமது எழுத்தாளர் கனகசபை பதில் எழுத ஆரம்பித்திருந்தார்.

எழுத்தாளர் என்றவுடன் ஐம்பதுக்கு மேலான வயதில் தீர்க்கமான கண்களுடைய மகான் போன்ற பிம்பத்தை மனதில் நிறுத்த முயற்சி செய்யாதீர்கள்.நமது கனகசபைக்கு முப்பத்திமூன்று வயது தான்.நோஞ்சான் ஆசாமி.உருவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை.வாசக விசிறிகள் அவரைப் பற்றிய ஏதேனும் உருவகத்தை மனத்திரையில் பதிந்து வைத்திருக்கலாம்.அதைப்பற்றி நமக்கு அக்கறையில்லை.

மற்றபடிக்கு ஆசாமி எழுத்தை தவமாகவோ,லட்சியமாகவோ கொள்கின்ற ஆளும் கிடையாது.சிறுவயதிலேயே ரசிக்கும்படி கதை நன்றாக விடுவார்.அதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தார்.மற்றபடி இவர் தான் ஆதர்சம் அவர் தான் குரு எனபது போன்ற குழப்பங்களும் அவருக்கில்லை.

காப்பியங்கள் படைப்பதோ,காவியங்கள் இயற்றுவதோ தனது வேலையில்லை என்ற அளவில் அவருடைய எழுத்துப்பணி இருந்தது.பேசுவதும் எழுதுவதும் அவருக்குப் பிடித்திருந்தது அதனால் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இதையும் மீறி அவருக்கென்று வாசகர் வட்டமும்,எதிர்ப்பதற்கென்று ஆ.ஜெ.போன்ற எழுத்துச் சக்கரவர்த்திகளும் இருந்தார்கள். 

எல்லோரையும் போல வயிற்றுக்கடவுளுக்காக அவரும் ஒரு வேலையில் இருந்தார்.பூனாவில்.தமிழனை தமிழன் ஆதரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட முதலாளியிடம் கேஷியர் வேலை.கனகசபைக்கு அதைவிட அதிகமாய் சம்பளம் தருகிற,உபத்திரவம் தராத  சேட்டுக்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தபடியால் தமிழனிடமே வேலை செய்தார். எல்லோரையும் போல் நண்பர்களும்,உறவினர்களும் அவருக்கிருந்தார்கள்.மனைவியும் இருந்தார்.அவரது எதிர்பார்ப்புக்கும் மேற்பட்ட அறிவும்,அழகும்,அன்புமுடைய மனைவி.ஒரேயொரு குறை.குழந்தையில்லை.அதிலும் அவருக்குப் பெரிய வருத்தமில்லை.மனைவிக்குத்தான் கவலை.அதனால் அவருக்கும்  வருத்தம்.

தேவைகள் குறைவாக இருந்ததாலும்,மனைவி செலவாளியில்லை என்பதாலும்,போதை வஸ்துக்களான சிகரெட்,விஸ்கி,பிராண்டி போன்றவற்றின் பரிச்சயமின்மையாலும் அவரது வருமானம் போதுமென்பதற்குச் சற்று அதிகம் என்றே கொள்ளவேண்டும்.

வேலையும் மாதத்தின் முதல் வாரத்தைத் தவிர பெரிதாக சிரமமாக இருக்காது.அதனால் அவரது எழுத்துப்பணி பெரும்பாலும் அலுவலகத்திலேயே முடிந்துவிடும்.

சாயங்கால வேளைகளில் நண்பர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.அதில் அவரது மனைவிக்கும் சந்தோஷமே,அந்த நீக்ரோவைத் தவிர.அவனுடைய உருவமும், பாவனைகளும்,பழக்கவழக்கங்களும் அம்மணிக்குப் பிடிக்கவில்லை.அவரின் இங்கித வரையறைகளுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தான்.காலப்போக்கில் அம்மணிக்கு அதுவும் உறுத்தலாக இல்லை.

நமது எழுத்தாளர் ஒன்றும் விசேஷமான நிறத்தில் எல்லாம் இல்லை.சிறுவயதில் அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அண்டங்காக்கா ஹர்ர்ர்ர்ன்னுச்சாம் என்று சத்தமாக குரலெழுப்பிவிட்டு ஓடிவிடுவார்கள் அவருடன் படித்த நண்பர்கள். 

நீக்ரோவைத் தவிர இரண்டு மராட்டியரும் ஒரு தெலுங்கரும் எழுத்தாளரின் நண்பர் வட்டம்.இவர்களது சந்திப்பு பெரும்பாலும் எழுத்தாளரின் வீட்டில் நிகழும்.அவரது மனைவியும் அவ்வப்போது இவர்களின் பேச்சில் கலந்து கொள்வார். இந்த ஐவரின் நட்பும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி வளர்ந்தது என்று தமிழறிஞர்கள் வர்ணிக்கும் விதத்தில் இருந்தது.

எழுத்தாளருக்கு எழுதுவதைப் போலவே பேசுவதும் கைவந்த கலை.அவருக்கு பேச்சு தருகின்ற போதையுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது.அதனால் தான் உலகத்தால் போதைப் பொருட்கள் என்று மொழியப்பட்ட வஸ்துகளுடன் அவருக்கு தொடர்பில்லாமல் போயிருக்க வேண்டும்.ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் போதை.

இவ்வளவு சந்தோஷமான மனிதன் வாழ்வில் ஒரேயொரு குறையை வைத்து, அதனால் அவனது ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாக  இறைவன் விரும்பவில்லை போலும்.அம்மணி உண்டானாள்.

அம்மணியும்,எழுத்தாளரும் வாழ்க்கை தரும் இன்பத்தின் உச்சத்தைக் கண்டார்கள்.அம்மணியின் வயிறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அம்மணிக்கு பெண் குழந்தை மேலும்,எழுத்தாளருக்கு ஆண் குழந்தை மேலும் ஆசை இருந்தது. பிறக்கப் போகின்ற குழந்தைக்கு பலவிதமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.அழகான பெயர்கள்,அசட்டுத்தனமான பெயர்கள்,அர்த்தமற்ற பெயர்கள் என்று முடிவின்றி சந்தோஷமாக நாட்கள் கழிந்தன.

ஒரு சுபதினத்தில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த குழந்தை பிறந்தது.தாயும்,சேயும் நலம்.சுகப் பிரசவமும் கூட.

எழுத்தாளரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஆண்குழந்தை பிறந்தது.குழந்தை அவரையே உரித்து வைத்தது போல இருந்தது.

எழுத்தாளர் விரும்பிய பெயரை அம்மணியும் ஏற்றுக் கொண்டார்.குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

அம்மணியின் ஆசைப்படி குழந்தையின் முதலாண்டு பிறந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

And they lived happily ever after.

பி.கு;

நடந்ததென்னவோ வேறு. அடர்ந்த சுருள்முடியுடனான பெண்குழந்தை பிறந்திருந்தது.

குழந்தை ஆப்பரிக்க கருப்பினத்தவரின் ஜாடையில் இருந்தாள். 

இறைவனின் திருவிளையாடல் இது போல் இருந்தாலும்,எழுத்தாளர் கனகசபையின் சந்தோஷத்தில் குறுக்கிட நாம் விரும்பவில்லை.

ஜனவரி 28, 2008

நடவண்டி

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 11:11 முப
Tags:

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆறு மணிக்கே சண்முகத்தின் தூக்கத்தை மேரி கலைத்துவிட்டிருந்தாள்.உறக்கம் கலைந்தாலும் படுக்கையிலிருந்து அவன் எழவில்லை.டீக்கடைப் பையன் எழுப்பிய பிறகே எழுந்தமர்ந்தான்.போதை தெளியாமலும்,தூக்கத்திலிருந்து விடுபடாமலும் டீயை லேசாக உறிஞ்சி விட்டு பீடியை பற்ற வைத்தான்.டீயையும்,பீடியையும் குடித்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டான்.

யோவ் எந்திரிய்யா, ஞாயித்துக்கிழமை அதுவுமா இன்னமும் தூங்கிட்டு இருக்க,அங்க ஒரே கூட்டமா இருக்கு என்று சொல்லிக்கொண்டே சண்முகத்தை படுக்கையிலிருந்து இழுத்து,தூக்கி நிற்க வைத்தான் குமார்.சண்முகத்தைத் தூக்குவதற்கு மலை போன்ற தோள்களுடைய குகனோ,ஆஜானுபாகுவான பீமனோ தேவையில்லை.கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் தூக்கிவிடக் கூடிய உடல்வாகு தான் சண்முகத்திற்கு இருந்தது.

அறிவு கெட்ட நாயே, மாதர்சோத்,போசடிக்க என சண்முகம் கத்த ஆரம்பித்தான்.அவன் கத்தியதை குமார் பொருட்படுத்தவில்லை.அவன் கத்திய வார்த்தைகளுக்கு பொருள் படுத்த முயற்சித்தாலும் எவ்விதமான பிரயோஜனமுமில்லை என்று குமாருக்குத் தெரிந்திருந்தது. நடவண்டியின் உதவியுடன் கத்திய வார்த்தைகள் கரைவதற்கு முன்பாகவே தனது இருப்பிடத்திலிருந்து பந்தலை நோக்கி சண்முகம் நகர ஆரம்பித்தான்.

நடவண்டி என்றவுடன் என்னவோ,ஏதோவென்று நினைத்துவிடவேண்டாம். தலைகீழ் U -வடிவிலான இரண்டு இரும்புக்கம்பிகளுக்கு இடையே ஒரு அகலமான தட்டால் இணைக்கப்பட்ட நடப்பதற்கு வசதியான ஊன்றுகோல் மாதிரியானதொரு சாதனம் அவ்வளவுதான். சண்முகம் அதை நடவண்டியென்று அழைத்ததால் அது நடவண்டி இல்லாவிட்டால் வேறுமாதிரி அழைக்கப்பட்டிருக்கக்கூடும்.

பந்தலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது.சண்முகம் அவனது பிரத்யேகமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.நீண்ட கிருதாவும்,நேர்த்தியான ஹேர்ஸ்டைலும் கறுப்பு கூலிங்கிளாஸும் அணிந்த  ஒரு இளைஞன் சண்முகத்திடம் வெளிறிய பச்சை நிறத்திலிருந்த சீட்டை நீட்டினான்.அதை வாங்கி என்னவென்றே பார்க்காமல் அருகிலிருந்த உடைந்த பிளாஸ்டிக் டப்பாவில் போட்டான்.சண்முகம் காட்டிய பாவனைகளைப் புரிந்ததுகொண்டு அவனுக்கு முன்னாலிருந்த உயரம் குறைவான ஸ்டூலில் இளைஞன் அமர்ந்துகொண்டான்.

ஒரு கையால் இளைஞனின் தலையைத் தரையைப் பார்க்கும்படி அழுத்திவிட்டு மறு கையால் குவளையிலிருந்த தண்ணீரை இளைஞனின் தலையில் தெளித்தான். சவரக்கத்தியால் இளைஞனின் தலையை மழிக்க ஆரம்பித்தான்.பலவருடப் பழக்கத்தால் லாவகமாக ஐந்தே நிமிடத்தில் இளைஞனை மொட்டையாக்கிவிட்டான்.

பந்தலைச் சுற்றிலும் விதவிதமான மொட்டைகள் காணப்பட்டன.ஒரு வயசு மொட்டை,அரை டவுசர் மொட்டை,ஆம்பளை மொட்டை,பொம்பளை மொட்டை,கிழவன்-கிழவி மொட்டை,படித்த மொட்டை,படிக்காத மொட்டை மற்றும் இன்னபிற மொட்டைகளுடன் ஒரு சிறிய மொட்டைச் சமுதாயமே உருவாகியிருந்தது.உறவினர்கள் மொட்டைகளை தங்களது கேமராவில் பல கோணங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

சண்முகத்திற்கு இடப்பக்கமாக குமாரும்,அவனையடுத்து மேரியும் மொட்டையடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.சண்முகம்,மேரியின் கைப்பிடித்து இருபத்தியிரண்டு வருடங்களானாலும் திருமணம் என்ற ஒன்றைச் செய்துகொண்டது பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு மேரியின் வயிற்றில் குமார் உருவானபோது தான். 

பதினான்கு பதினைந்து வயதிருக்கும்போது ஊரைவிட்டு ஓடி வந்து தற்செயலாக மொட்டையடிக்க ஆரம்பித்து கடந்த முப்பது வருடங்களில் தேர்ந்த சவரத்தொழிலாளியாகி விட்டான்.

வழக்கம்போல் ஒன்பது மணிக்கு இருந்த இடத்திலிருந்தவாறே இரண்டு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.இன்று கோயிலுக்கு வந்த பக்தர்களில் அநேகம்பேர் மொட்டையாகும் முடிவுடன் வந்தபடியால்,பதிவாக மதியம் ஒரு மணிக்கு வேலையை முடிப்பவன் கொஞ்சம் தாமதமாக இரண்டு மணியைப்போல் முடித்துவிட்டு தனது இருப்பிடத்திற்கு நகர ஆரம்பித்தான்.

அவனது இருப்பிடம் என்பது பந்தலிலிருந்து இருநூறடி தூரத்தில் இருக்கிற அரச மரத்தடியிலுள்ள ஆங்காங்கே நைந்துபோன ஒரு பழைய டேப் கட்டிலும்,கைகளும்-முதுகைச் சாய்ப்பதற்கான பகுதியும் உடைந்து போன ஒரு நாற்காலியும் தான்.உடல் வேட்கையை தீர்ப்பதற்காகவும்,மழை நேரங்களிலும் தான் அவர்களின் குடிசைக்கு ஒதுங்குவான்.

அவனது ஆஸ்தான கட்டிலில் அவனது வயிற்றுக்கும் நாவுக்கும் சேவை செய்கின்ற,மேரி வைத்துவிட்டுச் சென்ற சாப்பாட்டுத் தூக்கு சண்முகத்தை வரவேற்றது.கட்டிலில் அமர்ந்து கொண்டே தூக்கை திறந்து பார்த்தான். ரச சாதமும்,அவனுக்குப் பிடித்தமான விளமீன் வருவலும் இருந்தது.

தனது லுங்கியில் சுருட்டி வைத்திருந்த சாராய பாட்டிலைத் திறந்து குடிக்கத் தொடங்கினான்.சாப்பிடுவதும்,குடிப்பதும்,இடையிடையே உலகத்தைப் பார்ப்பதுவுமாக சாப்பாட்டை முடித்தான்.

அந்தப்பக்கமாக பைக்கில் வந்த அறம் செய்ய விரும்பிய மனிதர் ஏழெட்டு சாப்பாட்டுப் பொட்டலங்களை தெருவில் அவர் கண்களுக்கு பரிதாபமானவர்களாகப் பட்டவர்களிடம் கொடுத்துச் சென்றார்.ஏற்பது இகழ்ச்சி போன்ற ஆத்திசூடிகளை சண்முகம் அறியாததால் அவனும் ஒரு பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டான்.

சண்முகத்திற்கு களைப்பாகவும்,கிறக்கமாகவும் இருந்தது.கட்டிலில் படுத்துக்கொண்டான்.

பொதுவாக இது போன்ற சமயங்களில் கஞ்சாவும் அடித்துவிட்டு வாயில் வருவதை உளறிக்கொண்டும்,போவோர் வருவோரை நாம் கெட்ட வார்த்தையென்று சொல்லும் வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டும் இருப்பான்.இன்று மக்களின் அதிர்ஷ்டமோ என்னவோ அவன் அந்த மனநிலையில் இல்லை.

மேரியுடனான உடல் தொடர்பை விட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது.அவன் கண்ணால் மேரி அந்த சைக்கிள் கடை அன்புவிடம் படுத்திருந்ததை பார்த்தபிறகு சண்முகத்தின் ரோஷம் அதற்கு இடங்கொடுக்கவில்லை.அவளும் அதற்காக பெரிதாகக் கவலைப்படவில்லை.அவளுக்கு அது வசதியாகவே இருந்தது.

மாதத்திற்கு ஒருமுறையோ,இருமுறையோ உடல் தேவையைப் பொறுத்து ரம்பையோ,ஊர்வசியோ,ராக்காயியோ,மூக்காயியோ நூறு ரூபாய்க்குள்ளாக ஏதோவொரு மகராசியிடம் தேவையை தணித்துக்கொண்டு வந்துவிடுவான்.

பைக்கில் வந்த ஒருவன் இடித்து, நடப்பதற்கு சிரமமான பிறகு கடந்த நான்கு மாதங்களாக அதுவுமில்லை.அவ்வப்போது உடலும்,மனமும் பரபரத்தாலும் சென்று வருவதற்கு உடல்நிலை இடங்கொடுக்கவில்லை.  

தூக்கம் கலைந்து பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே எழுந்தான்.இருட்ட ஆரம்பித்திருந்தது.

ஏ சண்முகம் பீடி இருந்தாக் குடு  என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் வந்தமர்ந்தான் பக்கத்து வீட்டு  மாரியப்பன்.

போடா ங்கோத்தா உனக்காகத் தான் வாங்கி வச்சுருக்காங்க.மயிரு காசு கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று சொல்லிக் கொண்டே ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தான்.

ஊர்,உலக விஷயங்களைப் பற்றி பேச்சு தடையில்லாமல் சென்றது.இடையில் பீடிகளும் போய்க்கொண்டிருந்தன,பொழுதும் போய்க்கொண்டிருந்தது.மாரி சாப்பிடச் செல்வதாக்க் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்

பாட்டிலில் மீதி வைத்திருந்த சரக்கைக் குடித்துவிட்டு பார்வையை முதலில் தெற்கு வடக்காக வீசினான். பிறகு அவனையறியாமலே மேற்கில் கண்கள் நிலை பெற்றன.

யோவ் மழை வர்ற மாதிரி இருக்கு வீட்ல வந்து படு என்றான் குமார்.

ஒரு மசுரும் வராது.சாப்பிட்டுப் போட்டுத் தூங்கு என்றான்.

சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.வேகமாய் நகர்ந்து வீட்டிற்குச் சென்றான்.

குமாருக்கும்,சண்முகத்திற்கும் மேரி உணவு பரிமாறினாள்.சாப்பிட்டுவிட்டு சண்முகம் படுத்துக் கொண்டான்.குமார் அவனது நண்பனுடன் சினிமாவிற்கு போவதாகச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

சண்முகத்திற்கு உறக்கம் கைகூடவில்லை.புரண்டு படுத்தான்.உடல் தேவை படுத்த ஆரம்பித்தது.எண்ணங்களும் அதனுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கியது.

திரும்பிப்  பார்த்தான்.மேரி சற்றுத் தள்ளி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடினான்.உடலில் மேலும் வெப்பம் பரவ மனது தன் கட்டுக்குள் அடங்காத நிலையில் எழுந்து மேரியின் அருகில் சென்று படுத்தான்.மேரி கண்களைத் திறந்து பார்த்தாள்.அவள் கண்களில் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை.

திசெம்பர் 18, 2007

S.M.G.குரியன் அவர்களின் டோரா

Filed under: சிறுகதை — ஜெய்க்குமார் @ 11:19 முப
Tags:

அடையார் சாஸ்திரி நகரிலிருக்கிற பல குறுக்குத் தெருக்களிலும்,பிரதான சாலைகளிலும்,சந்துகளிலும் மிக முக்கியமான ஒன்று சாஸ்திரி நகர் 37வது குறுக்குத் தெரு.முக்கியம் அதன் நீள அகலத்தைப் பொறுத்தோ அது இருக்கின்ற இடத்தைப் பொறுத்தோ ஏற்பட்டதல்ல.ஐந்து வீடுகளைக் கொண்ட பல வருடங்களாக வெள்ளையடிக்காமல் வெளிறிப்போன ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் ஒரே ஒரு பங்களாவும் தான் அந்தத் தெருவில் இருந்தன.எட்டடி அகலமும் முப்பதடி நீளமும் கொண்ட அந்த சிறிய பாதைக்கு தெரு என்று நாமகரணம் சூட்டிய அந்த கனவானை சந்திக்க சேர்ந்தால் கட்டிப் பிடித்து முத்தமிட்டு கைகுலுக்கி எனது அன்பையும் மரியாதையையும் தெரிவிக்க வேண்டும்.

அந்தத் தெருவிற்கு முற்றிலும் பொருத்தமில்லாத பங்களாவில் தான் S.M.G.குரியன் அவர்களும் அவர்களது மனைவியும் வசித்து வருகிறார்கள்.அவர்களது மகனும்,மகளும் திரைகடலோடியும் திரவியம் தேட ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்கள்.பிழைப்பு தேடி மெட்ராஸ் வந்த நானும்,என் மனைவியும்,ஐந்து வயதாகிற எனது ஆருயிர் மகனும் இந்த எழில் கொஞ்சும் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் கடந்த மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்.தெருவின் முக்கியத்துவம் இப்பொழுது உங்களுக்கு புலப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.புரியாதவர்கள் தங்களுக்கு பொதுப்புத்தி மிகக் குறைவு என்பதை உணர்ந்து கொண்டு சந்தோஷமாக மேற்கொண்டு வாசிக்கவும்.

குரியன் அவர்களுக்கு அறுபது வயதுக்கு மேற்பட்ட ஏதோவொரு வயது.காலையில் வெயில் பரவ ஆரம்பித்த பிறகு ஏழுமணிக்கு மேல் வாக்கிங் கிளம்புவார்.கையில் ஒரு அடி நீளத்தில் கைத்தடி ஒன்று வைத்திருப்பார்.தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டு ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வீடு திரும்புவார்.அருகில் நடந்து போனாலும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவ்வளவு எளிதாக கிரகித்துக் கொள்ள முடியாது.பேசுவதற்காகவே வாக்கிங் போய்க் கொண்டிருந்ததால் அவருடைய பேச்சின் வேகமும் சத்தமும் கூடியிருந்ததே ஒழிய அவரது தொப்பை மூன்றுவருடத்திற்கு முன்பு பார்த்த நிலையிலேயே இருந்தது.

குரியன் அவர்களின் வீட்டில் காலை எட்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை இருக்கிற டிரைவரும், ஒரு முழுநேர தோட்டக்காரனும்(எலக்ட்ரீஷியன்,வாட்ச்மேன்,பிளம்பர்,கார்ப்பென்டர் என்று அந்த வீட்டின் சகலவிதமான வேலைகளையும் செய்யக்கூடிய எனக்குத் தெரிந்த ஒரேயொரு அஷ்டாவதானியோ பத்தாவதானியோ அவன் தான்) வேலை பார்க்கின்றனர்.இது போக ஒரு வளர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டும்,எந்த இனத்தைச் சேர்ந்தது என்று என்னால் கணிக்க இயலாத ஒரு குட்டி நாயும் இருக்கின்றன.குட்டி நாயின் பெயர் டோரா.

என் மகன் என்னையும் என் மனைவியையும் போலில்லாமல் அதீத சுறுசுறுப்பும் புத்திக் கூர்மையும் உடையவன்.நன்றாக படிப்பான்,விளையாடுவான்,பாட்டுப் பாடுவான்.ஒருவன் ஒருவன் மலையாளி உலகில் மற்றவன் கொலையாளி என்று பாடல் வரிகளை தவறாகப் பாடினாலும் ஏற்ற இறக்கங்களோடு மிக அழகாகப் பாடுவான்.அவனுடைய வயதில் இவ்வளவு அழகாக ஆட,பாட,படிக்கத் தெரிந்தவர்கள் இல்லையென்று நான் மட்டுமில்லை என் அம்மா,அப்பா என அனைவரும் கூறுவார்கள்.

இவ்வளவு நல்ல பையன் ஒரேயொரு விஷயத்தில் எங்களை படுத்திவிடுவான்.ஒழுங்காக சாப்பிட மாட்டான்.சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.பாட்டுப் பாடி,டான்ஸ் ஆடி விழுந்து புரண்டு பல்டி அடித்து ஊட்டி விட வேண்டும்.சமயத்தில் எங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்து டோராவை குரியன் அவர்களின் வீட்டுக்கு வெளியே விட்டிருப்பார்கள்.அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் டோராவுடன் விளையாடிக் கொண்டே வேகமாக சாப்பிட்டு விடுவான்.டோராவுக்கும் என் மகனை பிடித்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.இருவரும் வெகு நேரத்திற்கு ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

இதே போல் பத்து நாட்களுக்கு முன்பு டோராவும் என் மகனும் விளையாடும் போது டோராவை எதற்காகவோ விலக்கப் போக அவன் தள்ளி விடுகிறான் என்று நினைத்து லேசாக கடித்து விட்டது.அவன் அழுவதைப் பார்த்து நான் பதறி விட்டேன்.அவனது சத்தத்தைக் கேட்டு பயந்து டோரா வீட்டுக்குள் ஓடிவிட்டது.

நான் அவசரஅவசரமாய் என் மகனை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனேன்.வழக்கம்போல் கூட்டம் அதிகமாக இருந்தது.ஒருமணி நேரம் கழித்துத் தான் டாக்டரை பார்க்க முடிந்தது.

டாக்டர் என்ன ஆச்சு?என்று கேட்டார்.பதில் சொல்வதற்குள் அவருக்கு செல் போனில் அழைப்பு வர ஜாதகம் நாளைக்குத் தரேன்,பையன் அமெரிக்காவில தான் இருக்கான் என்று போன் பேசியவரது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்.

வெகு நேரம் நிதானமா பேசி முடித்துவிட்டு ம் என்ன ஆச்சு என்று திரும்பவும் கேட்டார்.நாயிடம் விளையாடும் போது பையனை நாய் கடித்துவிட்டது என்று சொல்லி அவன் கையை காண்பித்தேன்.

இரத்தம் வந்ததா? என்று கேட்டார்.

இல்ல சார் என்றேன்.

ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை என்று கூறி ஊசி போட்டு சில மருந்துகளைக் கொடுத்தார்.இன்னும் ஒரு வாரத்தில நாய்க்கு ஒண்ணும் ஆகலேன்னா ஒரு பிரச்சினையும் இல்லை என்று கிளம்பும் போது கூறினார்.

நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா? பயத்துடன் வினவினேன்.

லேசான கடி தான் ஒண்ணும் ஆகாது பயப்படாம போய்ட்டு வாங்க என்றார்.

மிகுந்த வருத்தத்துடன் மருத்துவமனையிலிருந்து கிளம்பினேன்.டோரா மேல் கோபம்கோபமாய் வந்தது.

நிம்மதியான தூக்கமே இல்லை.சரியாக தூக்கம் வராததால் அதிகாலை போல உறங்கி லேட்டாகவே எழுந்தேன்.எழுந்தவுடன் வேகமாக கீழிறங்கி டோரா எப்படியிருக்கிறது என்று பார்க்கப் போனேன்.டோரா உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது.சந்தோஷமாக வீடு திரும்பினேன்.

நாள் முழுவதும் டோராவைப் பற்றிய நினைப்பாகவே இருந்தது.வேலையில் கவனமே செல்லவில்லை.

தவிர்க்க முடியாத வேலை என்பதால் அடுத்த நாள் ஹைதராபாத் சென்றேன்.அங்கும் மனம் ஒரு நிலையில் இல்லை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மனைவிக்கு போன் பண்ணி டோராவின் நிலையைப் பற்றி கேட்டறிந்து கொண்டேன்.

டூர் முடித்து ஒரு வாரம் கழித்து திரும்பியபோதும் டோரா நலமாகவே இருந்தது.திரும்பவும் என் மகனை அழைத்துச் சென்று டாக்டரிடம் காண்பித்தேன்.டோரா நன்றாக இருப்பதையும் அவரிடம் கூறினேன்.

என் மகனை பரிசோதித்து பார்த்துவிட்டு ஒண்ணும் பிரச்சினையில்லை நோ ப்ராப்ளம்.இனி மேல் நாயிடம் விளையாட விடாதீங்க என்றார்.

என் மகனை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினேன்.

நான் எனது வீட்டை நெருங்கியபோது டோரா வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.சுற்றிலும் பார்த்தேன் யாருமில்லை.டோராவின் வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டேன்.கீ கீ என்று சத்தமிட்டுக் கொண்டே தூரமாய் விழுந்தது.

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.