நான்

பெப்ரவரி 26, 2008

கண்ணதாசனும் சாய்பாபாவும்

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 10:34 நான்
Tags:

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருப்பது கே.கே.நகர் வக்கீல் தெரு.சற்றே நீளமானதும்,அகலமானதுமான தெரு.இந்நாள்,முந்நாள் ஐ,ஏ.எஸ் அதிகாரிகளும்,நீதியரசர்களும்,தொழிலதிபர்களும் வாழுமிடம்.தெரு நெடுக ஆங்காங்கே மரங்கள்.பெரும்பாலும் குல்முகரும் புங்கையும்.ஒரேயொரு ஒற்றை வேப்ப மரம்.அதை ஒட்டினாற் போலுள்ள பங்களா ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியாளர் விஸ்வநாதன் சாருடையது.அதற்கடுத்த வீட்டில் தான் நமது நண்பர் கடந்த ஆறு மாத காலமாக வசித்து வருகிறார்.நண்பர் தனது அப்பா,அம்மா இருவரையும் பறிகொடுத்து இரண்டு நாள் தான் ஆகின்றது.அந்த சோகத்தினாலோ என்னவோ இருப்பிடத்தை விட்டு நகரவேயில்லை.

கோலா நிறம்.பளபளப்பாகவும்,மினுமினுப்பாகவுமிருப்பார்.சற்றே புஷ்டியான உடல்வாகு.சொல்லிக்கொள்ளும்படியான உயரமில்லை.நீளம் ஏதேசம் ரெண்டு இஞ்ச்.மீசையை சதா இங்குமங்கும் அசைத்துக்கொண்டிருப்பார்.நாளைக்கு நான்கு மணி நேர உழைப்பு.

இயக்கம்,உற்சாகம்,விளையாட்டு எல்லாம் அதற்குள் அடக்கம்.அதுவும் வெளிச்சமற்ற இரவில்.மற்ற நேரங்களில் ஆழ்ந்த சிந்தனை அல்லது உறக்கம்.

மூன்று ஜதைக் கால்கள்,இரண்டு ஜோடி இறக்கைகளுடன் வலம் வருவார்.எதிரியின் வருகையை காற்றின் சிறுஅசைவிலேயே புரிந்து கொண்டு,தப்பிக்கும் நோக்கில் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்க ஆரம்பிப்பார்.ஆக்ரோசமாய் தாக்க வருவதாய் நினைத்து எதிரிகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள்.பின்னங்கால் பிடரியில் அடிக்கக்கூடிய அளவுக்கு உடல்வாகு படைத்தவர்கள் பிடரியிலடிக்க ஓடுவதுமுண்டு.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வீட்டில் வசிக்கும் மற்றுமொரு நபரான கண்ணதாசனால் நமது நண்பரின் சொந்தபந்தங்கள்,உறவினர்கள் என மொத்தம் நூற்றியேழு பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள்.தற்சமயம் தப்பித்து  மிஞ்சியிருப்பது இவர் மட்டுமே.நண்பருக்கு அவருடைய அம்மா அப்பா வேறு பெயர் வைத்திருந்தாலும்,உங்களது புரிதலுக்காக கரப்பான் என்றே அழைப்போம். தற்போது குளியலறையிலுள்ள வாஷ்பேசினுக்கு பின்புறத்தில் எவ்வித அரவமுமின்றி அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

நூற்றியேழு பேரை ஒரே நாளில் கொன்றபடியால் கண்ணதாசனை கொடூரமான நெஞ்சம் படைத்தவர் என்றெல்லாம் முடிவு செயதுவிடவேண்டாம்.தற்போதுள்ள உலக விதிகளின்படியும்,நடைமுறைகளின்படியும் ஓரளவுக்கு நல்லவர்தான்.கடந்த நான்கு வருடங்களாக பூச்சிகளின் மேல் ஒரு வெறுப்பு குறிப்பாக கரப்பான்களிடம்.

சிறு வயதில் வானத்து நட்சத்திரங்களிடமும் தரையில் வண்ணத்துப்பூச்சிகளிடமும் நட்பு உறவு காதல்.பகலில் வெட்டுக்கிளி,வண்ணத்துப்பூச்சி,பொன்வண்டு முதலானவற்றை ரசிப்பதுவும்,இரவில் நட்சத்திரங்களைப் பார்ப்பதுவுமாக அவரது வாழ்க்கை நகர்ந்தது.படிப்பு வந்த அளவுக்கு பொதுவாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களோ இன்னபிற வித்தைகளோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.சரஸ்வதி மட்டுமே அவர் பேரில் ஆதிக்கம் செலுத்தினாள் போலும்.

பெரிய முயற்சிகள் ஏதுமின்றி தேர்வுகளில் அதிகமதிப்பெண்கள் பெற்றார்.வங்கியில் வேலை கிடைத்தது.அனந்தகோடி கூட்டல் கழித்தல்களைச் செய்தார்.அதனால் இப்போது வங்கியில் கிளை மேலாளர்.ஏறு தழுவாமல்,வில்லை வளைக்காமல் கீதாதேவியுடன் அவரது திருமணம் இனிதே நிறைவேறியது.

கண்ணதாசனுக்கு வாய்த்த தலைவியும் நல்லவர்தான்.ஆனால் தலைவிக்கு பூச்சிகளென்றால் ஒருவித அருவெறுப்பு.அசூயை.குழந்தையாய் இருக்கும்போது ஏற்பட்ட ஏதோவொரு மனக்குறைபாடு.தலைவரும் என்ன செய்வார் பாவம்! எவ்வித யோசனையும்,தயக்கமுமின்றி பூச்சிகளின் எதிரியானார்.

கண்ணதாசனுக்கு வயது இருபத்தொன்பது.உயரம் 175 செ.மீ.எடை 87 கி.கி. கறுப்பு நிறம்.மாநிறம் என்று சொல்லிக்கொள்வார்.ஓ பாசிடிவ் வகை ரத்தம்.கண்ணாடி அணிந்திருப்பார்.கழட்டினால் அவருக்கும் கஷ்டம்.நமக்கும் கஷ்டம்.

கண்ணதாசனின் தந்தை கொள்கை பிடிப்பாளர்.பகுத்தறிவுப் பாசறையில் பகுத்தறிவு பெற்றவர்.மகனுக்கு சீர்திருத்தக் கல்யாணமென்று முடிவு செய்தார்.தந்தை சொல் மிக்க மந்திரமேது? அதுவும் போக தனயனுக்கும் பகுத்தறிவாளனாவதில் விருப்பம் தான்.

கண்ணதாசனின் சமூகத்தார் முடிவெடுத்தால் ஆயிற்றா? கீதாதேவியின் தந்தை தமிழ் ஆசான்.பொழுதுபோக்கிற்கு வேலை மற்றபடி வருமானத்திற்கு நிலபுலன்கள் ஏராளம்.குறள் வெண்பாவின் இலக்கணங்களையும்,சூத்திரங்களையும் விரல் நுனியிலோ,நாக்கு நுனியிலோ வைத்திருப்பவர்.இப்போதும் மாமனாரும்,மருமகனும் நேர் நேர் தேமா,நிரை நேர் புளிமா என்று பேசிக்கோள்வார்கள்.பேச்சை எங்கு ஆரம்பித்தாலும் குறள் வெண்பாவில் வந்து முடிப்பார்.இதுவரை 65 குறள்களை புதுக்குறள்கள் என்ற தலைப்பில் எழுதிவிட்டார் இன்னும் 68 குறள்களை எழுதிவிட்டால் 133 குறள்களுடன் தன் செலவில் புத்தகமாக வெளியிட்டுவிடுவார்.அதன்பிறகு படிப்பவர்கள் பாடு.

சடங்கு சம்பிரதாயங்களை வாழ்க்கை முறையாகவும்,நெறியாகவும் கொண்டவர் கீதாதேவியின் தந்தை.இந்தவிதமான திருமண ஏற்பாட்டிற்கு அவர் ஒத்துவரவில்லை.திருமணமே நின்று போகின்ற சூழ்நிலைக்குச் சென்றது.கண்ணதாசனின் தந்தை இதற்கெல்லாம் அசரவில்லை.அவருக்கென்ன?பெண் பார்த்த பொழுதிலிருந்தே இல்லறமென்ற புனிதப் பயணத்தை கண்ணதாசன் தனது மனதில் துவக்கியிருந்தார்.அவர் பாடுதான் திண்டாட்டமாகப் போய்விட்டது.

பலத்த யோசனைக்குப்பின் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான சமாதானத் திட்டத்தை முன் வைத்தார்.அதன்படி முதல் நாள் விமரிசையாக சீர்திருத்தக் கல்யாணமும்,அடுத்தநாள் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அசீர்திருத்தத் திருமணமும் நடைபெற்றது.

ஊரின் பெரும்புள்ளியான கோணமுதுகு நாயக்கரின் தலைமையில்,ஊர் பெரிய மனிதர்களின் ஆசிர்வாதத்துடன் கண்ணதாசனின் திருமணம் இனிதே நிறைவேறியது. 

இல்லறவாழ்வின் பயனாக மூன்று வயதான அபூர்வா என்ற பெண்குழந்தை.

இன்று அவர்களுக்கு திருமண நாள்.அண்ணா நகரிலுள்ள அரசன் தியேட்டரில் சினிமா பின்பு ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்புவதாய் தீர்மானம்.டிக்கெட் எடுத்தபின் நேரம் நிறைய இருந்ததால் பக்கத்திலுள்ள கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடிவெடுத்தார்கள்.வாங்கிவிட்டு தியேட்டருக்குத் திரும்பும் வழியில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போவோர் வருவோர்க்கு நோட்டீஸ் கொடுத்ததுக் கொண்டிருந்தார்.இவர் கையிலும் ஒன்றைத் திணித்தார்.

அது வேளாங்கண்ணி மாதாவின் அற்புதங்களைப் பற்றிய நோட்டீஸ்.இதைப் படிப்பவர்கள் இது போல் இருநூறு நோட்டீஸ் அடித்தால் லட்சக்கணக்கில் பணம் வந்து குவியுமென்றும் இல்லாவிட்டால் வீட்டிற்கு பெரும் பிரச்சினைகள் மலைபோல்  வந்து சேருமென்றும் கடைசி பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.இப்படிக்கு உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டும் உள்ளம் என்றும் எழுதியிருந்தது.கண்ணதாசன் கோபத்துடன் கிழித்தெறிந்தார்.  

சினிமா தியேட்டரிலேயே அபூர்வா உறங்கிவிட்டாள்.அவர்கள் இருவர் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர்.அவரது செல்போனில் sms வந்திருந்தது.அவரின் அலுவலக நண்பர் அனுப்பியிருந்தார்.

ஷிரிடி சாய்பாபாவின் மேன்மையைப்பற்றி விளக்கி, அந்தச்செய்தியை 21 நபர்களுக்கு அனுப்பவேண்டுமென்றும் அனுப்பினால் அற்புதங்கள் நிகழுமென்றும்,அப்படிச் செய்யாமல் அழித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்குமென்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.திட்டிக்கொண்டே smsஐ செல்போனிலிருந்து நீக்கினார்.

படம் பார்த்துவந்த அசதியில் சீக்கிரமே உறங்கிப் போனார்கள்.சாப்பிடாமல் தூங்கிய அபூர்வா பசியால் காலை ஐந்து மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து அழத்துவங்கினாள்.குழந்தை வளர்ப்பை தம் வாழ்வின் தலையாய லட்சியமாகக் கொண்ட கண்ணதாசனும் சுறுசுறுப்பாக எழுந்துகொண்டார்.மனைவி தோசையை சுட்டுத்தர அற்புதாவுக்கு கதை சொல்லி ஊட்ட ஆரம்பித்தார்.

நமது நண்பர் கரப்பான் உற்சாகமாகத் திரிகின்ற நேரமிது.அவருக்குத் தெரியுமா அபூர்வா திடீரென்று அழுவாள். முழிப்பாளென்று.இவர்களின் நடமாட்டத்தைப் பார்த்ததும் ஓடி ஒளியப் பார்த்தார்.அதற்குள்ளாக பூதக்கண்ணாடி அணிந்திருக்கிற கண்ணதாசனின் கண்களில் மாட்டிக்கொண்டார்.

கோபம் தலைக்கேற கரப்பானைக் கொல்வதற்கு வசதியான பொருளைத் தேடினார்.ஒன்றும் அகப்படவில்லை.கதவோரமாய் கரப்பான் பதுங்கினார்.ஒரு கையில் அபூர்வாவை வைத்துக்கொண்டு மறு கையால் கொஞ்சம் கனமான மிதியடியை(door mat) எடுத்து பலங்கொண்டமட்டும் ஓங்கி வீசினார்.கையிலிருந்து நழுவி வசமிழந்து கரப்பானிலிருந்து தூரமாய் விழுந்தது.வசமிழந்ததால் கை இலக்கின்றிப் போய் கதவின் கைப்பிடியில் பலமாக மோதியது.

கைக்கு பலத்த சேதாரம்.வலியில் கத்திக்கொண்டே குழந்தையை கீழே இறக்கிவிட்டுவிட்டு அதே மிதியடியால் கரப்பானைக் கொன்றார்.

கையிலிருந்து ரத்தம் ஊற்ற ஆரம்பித்தது.அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றார்.பலத்த எலும்பு முறிவு.கை சரியாவதற்கு நாற்பது நாட்களுக்கு மேலானது.

எவரின் கருணையால் இது நடந்தது என்று தீர்மானிக்க முடியாமல் முடி காணிக்கை செலுத்துவதற்காக வேளாங்கண்ணிக்கும்,சாய் பாபாவை தரிசிப்பதற்காக புட்டபர்த்திக்கும் குடும்பசகிதமாகச் சென்றார்கள் கண்ணதாசன் தம்பதியர். 

1 மறுமொழி »

  1. Message from Shan: This is Drishti Ganapathi. Send to 10 people & see magic in 7 mins.U will get what u want. ” NOT A JOKE” Do try.
    Pin Kurippu: Naan atahi delete pannalaippa

    மறுமொழி ஆல் bala — மார்ச் 6, 2008 @ 9:57 பிற்பகல்

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.