நான்

மார்ச் 20, 2008

பயணம்

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 12:19 பிற்பகல்
Tags:

மிஸ்டர் சிவா சென்னை வந்து மூன்று வருடங்களானாலும் எக்மோர் ஸ்டேசனை மிதிப்பது இது தான் இரண்டாவது முறை.எக்மோர் என்றில்லை ரயிலில் பயணிப்பதும் இரண்டாவது முறை தான்.ரயில் நிலையத்தின் விதிகளும்,நடைமுறைகளும் அவருக்குப் பிடிபடாததால் பெரும் சிரமத்திற்குப் பிறகே தனது இருக்கையைச் சென்றடைந்தார். சூட்கேஸை இருக்கையில் வைத்துவிட்டு பதற்றத்துடன் சற்று தூரமாக அமர்ந்திருந்தவரிடம் அது வைகை எக்ஸ்பிரஸ் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

சிவா கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மூன்றாமாண்டு மாணவர்.நியூட்டனின் விதிகளை அறிந்த அளவுக்கு உலக விஷயங்களில் அவ்வளவு ஞானம் கிடையாது.விதிகளும் விதிகள் என்ற அளவில் மட்டுமே அவருக்குத் தெரியும்.விடுமுறையைக் கழிக்க சொந்த ஊரான தெத்துப்பட்டிக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஊரின் முதல் இஞ்சினியர் என்ற பெருமிதம் அவருக்கும் அவரது பெற்றோருக்கும்.மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்த செய்தி அறிந்ததும் சிவாவின் தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவந்தார்.இரண்டு டாக்டர்களையும்,ஒரு கலெக்டரையும்,சில ஆசிரியர்களையும்,பலவிதமான அம்மா அப்பாக்களையும்,அண்ணன் தம்பிகளையும் உருவாக்கிய பிரதேசம் முதன்முறையாக ஒரு இஞ்சினியரையும் உருவாக்கியது.

மிஸ்டர் சிவாவின் தந்தை ராமசாமி மூப்பனார் ஊரின் முக்கிய புள்ளிகளில் ஒருவர்.என்றாலும் கொள்ளாயிரம் என்றோ கொல்லாயிரம் என்றோ அழைக்கப்பட்டார்.’ஆயிரம் இருந்தாலும்’ என்ற வார்த்தைகள் அவரது உரையாடலின் ஓர் அங்கமாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட குணப்பெயரோ அல்லது பண்புசார் பெயரோ!அவ்வாறு விளிக்கப்பட்டாலும் மரியாதை கலந்த தொனியிலேயே அழைக்கப்பட்டார்.

அவரது உடலுக்கும் பொருளுக்கும் விவசாயம். ஆவிக்காக ஆன்மாவிற்காக உபதொழிலாய் ஜோசியம்.தொழில் என்று கூடச் சொல்ல முடியாது.தொழில் என்றால் லாபமோ,நஷ்டமோ இருக்கவேண்டும் என்பது நியதியல்லவா? ஜோசியம் பார்க்க வருபவர்களிடம் சன்மானமோ,வெகுமதியோ பெறமாட்டார்.தெத்துப்பட்டி சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற மரியாதை மட்டுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

வெள்ளிக்கிழமை அவருக்கும் ஊர் மக்களுக்கும் விசேஷமான நாள்.கொள்ளாயிரத்தார் ஜோசியம் பார்க்கும் நாள் என்பதால் ஏற்பட்ட முக்கியத்துவம்.வெள்ளியானால் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து வெள்ளாடை அணிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டு பூஜைகளை முடித்து பரவசமான நிலையில் மணையில் அமரும்போது தெய்வீகமாகக் காட்சியளிப்பார்.மணையில் அமர்ந்துவிட்டால் ‘ஆயிரம் இருந்தாலும்’ போன்ற அற்பமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து உதிர்வதில்லை.குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் மணை வாசம்.இயல்பான ராமசாமி மூப்பனாரை தரிசிக்க வேண்டுமாயின் மணையிலிருந்து இறங்கிய பிறகே வாய்க்கும்.

கொள்ளாயிரத்தாருக்கு முதலில் பிறந்த இரண்டும் பெண் பிள்ளைகள்.கடைசியாக ஆண் வாரிசாக மிஸ்டர் சிவா.சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை.சூட்கேஸை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்தன.இருந்தபோதிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலரே அந்தப் பெட்டியில் இருந்தார்கள்.இந்தக்காலத்தைப் போல் அந்த நாள்களில் ரயிலில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கவில்லை.மிஸ்டர் சிவாவுக்கு எதிர்ப்பக்க ஜன்னலோர இருக்கையில் முப்பது வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணும் அவருக்கு வலப்புறத்தில் சற்று தள்ளி ஒரு வயதானவரும் இருந்தனர்.

ரயில் நகர ஆரம்பித்தது.பெண்ணை வழியனுப்ப அவரின் அம்மா,அப்பா,அண்ணன் மூவரும் வந்திருந்தார்கள்.பெண்ணும்,அம்மாவும் விழிகளில் நீர் திரள விடை பெற்றுக்கொண்டார்கள்.இந்த சம்பவங்கள் எதுவும் சிவாவின் கண்களில் படவில்லை.பயண அலுப்பைக் குறைப்பதற்காக ரயில் நிலையத்தில வாங்கிய பாக்கெட் நாவலை வாசிக்கத் துவங்கியிருந்தார்.பக்கத்து அறை நண்பனின் சகவாசத்தால் கிடைத்த ஞானமிது.

எழுத்தின் வெளியில் மிதக்கலானார்.

வினோத் டம்பப்பையை ஜிப்ஸியின் பின்புறத்தில் எறிந்து,ரேபானை கண்களில் அணிந்து,எஞ்சினுக்கு உயிரூட்டும் போது எதிரில் அமர்ந்திருந்த பெண் புக்ஸ் நிறையா படிப்பீங்களா? என்றாள்.

இல்லங்க டிராவல் பண்ணும்போது எப்பவாவது படிப்பேன்.ஜன்னலோரப் பெண்ணைப் பார்த்தும் பாராமல் பதிலளித்துவிட்டு புத்தகத்தில் கண்களை நிறுத்தினார்.

பெண்ணின் முகத்தில் பேசுவதற்கான ஆர்வம் இருந்தது.ஐந்தரை அடி உயரம்.காட்டன் சாரி அணிந்திருந்தாள்.உற்சாகமான முகபாவம்.உதறித்தள்ள இயலாத அழகு.வேகமாய் நகர்கின்ற வெளியில் எவ்வித சலனமுமின்றி அவளது விழிகள்.

சிவாவின் பக்கமாய் விழிகளைத் திருப்பி என்ன பண்றீங்க?காலேஜ் படிக்கிறீங்களா? என்றாள்.

கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல பி.இ தேர்ட் இயர்ங்க.மிஸ்டர் சிவாவுக்கு தயக்கம் விலகவில்லை.

அளவாத்தான் பேசுவீங்களா? இல்ல பொண்ணுங்கட்ட பேசுறதல கூச்சமா?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க.லேசாக சிரித்துக் கொண்டே புத்தகத்தை மூடினார்.

லீவுக்கு ஊருக்கு போறீங்களா? எந்த ஊரு?

ஆமாங்க.திண்டுக்கல்.நீங்க?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சைதாப்பேட்ல தாங்க.எங்கப்பாவுக்கு டெலிபோன் எக்சேஞ்ச்ல வேல.எங்க வீட்ல என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு பேர்.நாந்தான் கடைக்குட்டி.எட்டு மாசத்துக்கு முன்னால தான் எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க.அவர் சென்ட் ஜோசப் கலேஜ்ல லெக்சரா இருக்கார்.உங்க வீட்ல?

எங்களோடது விவசாயக்குடும்பம்.நாங்க மொத்தம் அஞ்சு பேருங்க.நானும் வீட்டுக்கு கடசி தான்.எங்கப்பாவுக்கு ஊர்ல நல்ல மரியாதைங்க.பஞ்சாயத்து பிரசிடென்ட்டா இருக்கார்.பெருமிதத்துடன் சொன்னார்.

அப்பா கிளர்க்ங்கறதுனால வருமானம் குறைச்சலா இருந்தாலும் எங்க வீடு கூத்தும் கும்மாளமுமா இருக்கும்.அதுவுமில்லாம வீட்டுக்கு ஒரே பொண்ணுங்கறதால ரொம்பச் செல்லம்.

பெண் தேநீர் வாங்கித்தர இருவரும் அருந்தினர். 

என்னோட புகுந்த வீட்டுக்கும்,பொறந்த வீட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லங்க.மாமியார் விருப்பப்படி தான் வீட்ல எல்லாமே நடக்கும்.அவங்க வச்சது தான் சட்டம்.சிரிச்சுப் பேசுறதோ சத்தமாப் பேசுறதோ அவங்களுக்கு சுத்தமாப் பிடிக்காது.வீட்டுக்கு யார் வந்தாலும் நான் ஹால்ல இருக்கக்கடாது.உள் ரூமுக்கு போயிரணும்.மொதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க.இப்ப ஓரளவுக்குப் பழகிடுச்சு.

ரயில் விரைந்து கொண்டிருந்தது.

கொள்ளாயிரத்தாருக்கு அவரது பத்தொன்பது வயதில் திருமணம்.பக்கத்து ஊர் பெரிய மனிதரான பெரியசாமி மூப்பனாரின் சௌந்தர்ய புத்திரி லஷ்மி அம்மாளை மணந்து கொண்டார்.லஷ்மி அம்மாள் பெயருக்கேற்றார் போல் லஷ்மிகரமாகவும் மங்களகரமாகவும் இருந்தார்.இருந்தென்ன? சீர்,செல்வம்,தாம்பத்ய இன்பத்தைக் கொடுத்தால் ஆயிற்றா?

மழலைச் செல்வம் எட்டாக்கனியாக இருந்தது. கொள்ளாயிரத்தாரால் அவரது ஆண்மையை அவரின் சமூகத்தாரிடம் பறைசாற்ற முடியவில்லை.ஆண்மையை நிலைநாட்ட லஷ்மி அம்மாளுக்கு அடியும் உதையும்,ஏச்சும் பேச்சும் உபரியாக மலடிப் பட்டமும்.

எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு லஷ்மி அம்மாள் கருத்தரித்தார்.பிரசவத்தின் போது ஏற்பட்ட ஏதோவொரு கோளாறு.உலகத்தைப் பார்க்காமலே சேயும்,லோக கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தாயும் பரலோகம்.

அடுத்த வருடம் கொள்ளாயிரத்தாருக்கு மறுமணம்.பத்தே மாதத்தில் குழந்தை.கொள்ளாயிரத்தாருக்கும் அவர் மேல் அவருக்கே இருந்த சந்தேகம் விலகியது.அடுத்தடுத்து மேலும் இரண்டு குழந்தைகள்.பொருட்செல்வமும் பெருகியது. 

ரயில் திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது.

திருச்சில உங்க வீட எங்க இருக்கு? மிஸ்டர் சிவா கேட்டார்.

தில்லை நகர்ல.

என் ப்ரெண்டு வீடும் தில்லை நகர்ல தாங்க இருக்கு.

நீங்க திருச்சிக்கு வந்தாலும் எங்க வீட்டுக்கு வர முடியாது.ஏன்னா இப்ப இறங்கிறப்பக்கூட போய்ட்டுவர்ரேன்னு சொல்லிட்டுப் போகமுடியாதுங்க.என்னக் கூட்டிட்டுப் போறதுக்கு எங்க வீட்டுக்காரர் வந்திருப்பாரு.பாத்தா சந்தேகப்படுவார்.தப்பா நினைச்சுக்காதீங்க.

ரயில் திருச்சி சந்திப்பில் நின்றது. சூட்கேஸை எடுத்துக்கொண்டு தன்னை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவனை நோக்கி நடந்தாள்.

பெப்ரவரி 26, 2008

கண்ணதாசனும் சாய்பாபாவும்

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 10:34 நான்
Tags:

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருப்பது கே.கே.நகர் வக்கீல் தெரு.சற்றே நீளமானதும்,அகலமானதுமான தெரு.இந்நாள்,முந்நாள் ஐ,ஏ.எஸ் அதிகாரிகளும்,நீதியரசர்களும்,தொழிலதிபர்களும் வாழுமிடம்.தெரு நெடுக ஆங்காங்கே மரங்கள்.பெரும்பாலும் குல்முகரும் புங்கையும்.ஒரேயொரு ஒற்றை வேப்ப மரம்.அதை ஒட்டினாற் போலுள்ள பங்களா ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியாளர் விஸ்வநாதன் சாருடையது.அதற்கடுத்த வீட்டில் தான் நமது நண்பர் கடந்த ஆறு மாத காலமாக வசித்து வருகிறார்.நண்பர் தனது அப்பா,அம்மா இருவரையும் பறிகொடுத்து இரண்டு நாள் தான் ஆகின்றது.அந்த சோகத்தினாலோ என்னவோ இருப்பிடத்தை விட்டு நகரவேயில்லை.

கோலா நிறம்.பளபளப்பாகவும்,மினுமினுப்பாகவுமிருப்பார்.சற்றே புஷ்டியான உடல்வாகு.சொல்லிக்கொள்ளும்படியான உயரமில்லை.நீளம் ஏதேசம் ரெண்டு இஞ்ச்.மீசையை சதா இங்குமங்கும் அசைத்துக்கொண்டிருப்பார்.நாளைக்கு நான்கு மணி நேர உழைப்பு.

இயக்கம்,உற்சாகம்,விளையாட்டு எல்லாம் அதற்குள் அடக்கம்.அதுவும் வெளிச்சமற்ற இரவில்.மற்ற நேரங்களில் ஆழ்ந்த சிந்தனை அல்லது உறக்கம்.

மூன்று ஜதைக் கால்கள்,இரண்டு ஜோடி இறக்கைகளுடன் வலம் வருவார்.எதிரியின் வருகையை காற்றின் சிறுஅசைவிலேயே புரிந்து கொண்டு,தப்பிக்கும் நோக்கில் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்க ஆரம்பிப்பார்.ஆக்ரோசமாய் தாக்க வருவதாய் நினைத்து எதிரிகள் அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள்.பின்னங்கால் பிடரியில் அடிக்கக்கூடிய அளவுக்கு உடல்வாகு படைத்தவர்கள் பிடரியிலடிக்க ஓடுவதுமுண்டு.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த வீட்டில் வசிக்கும் மற்றுமொரு நபரான கண்ணதாசனால் நமது நண்பரின் சொந்தபந்தங்கள்,உறவினர்கள் என மொத்தம் நூற்றியேழு பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள்.தற்சமயம் தப்பித்து  மிஞ்சியிருப்பது இவர் மட்டுமே.நண்பருக்கு அவருடைய அம்மா அப்பா வேறு பெயர் வைத்திருந்தாலும்,உங்களது புரிதலுக்காக கரப்பான் என்றே அழைப்போம். தற்போது குளியலறையிலுள்ள வாஷ்பேசினுக்கு பின்புறத்தில் எவ்வித அரவமுமின்றி அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

நூற்றியேழு பேரை ஒரே நாளில் கொன்றபடியால் கண்ணதாசனை கொடூரமான நெஞ்சம் படைத்தவர் என்றெல்லாம் முடிவு செயதுவிடவேண்டாம்.தற்போதுள்ள உலக விதிகளின்படியும்,நடைமுறைகளின்படியும் ஓரளவுக்கு நல்லவர்தான்.கடந்த நான்கு வருடங்களாக பூச்சிகளின் மேல் ஒரு வெறுப்பு குறிப்பாக கரப்பான்களிடம்.

சிறு வயதில் வானத்து நட்சத்திரங்களிடமும் தரையில் வண்ணத்துப்பூச்சிகளிடமும் நட்பு உறவு காதல்.பகலில் வெட்டுக்கிளி,வண்ணத்துப்பூச்சி,பொன்வண்டு முதலானவற்றை ரசிப்பதுவும்,இரவில் நட்சத்திரங்களைப் பார்ப்பதுவுமாக அவரது வாழ்க்கை நகர்ந்தது.படிப்பு வந்த அளவுக்கு பொதுவாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களோ இன்னபிற வித்தைகளோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.சரஸ்வதி மட்டுமே அவர் பேரில் ஆதிக்கம் செலுத்தினாள் போலும்.

பெரிய முயற்சிகள் ஏதுமின்றி தேர்வுகளில் அதிகமதிப்பெண்கள் பெற்றார்.வங்கியில் வேலை கிடைத்தது.அனந்தகோடி கூட்டல் கழித்தல்களைச் செய்தார்.அதனால் இப்போது வங்கியில் கிளை மேலாளர்.ஏறு தழுவாமல்,வில்லை வளைக்காமல் கீதாதேவியுடன் அவரது திருமணம் இனிதே நிறைவேறியது.

கண்ணதாசனுக்கு வாய்த்த தலைவியும் நல்லவர்தான்.ஆனால் தலைவிக்கு பூச்சிகளென்றால் ஒருவித அருவெறுப்பு.அசூயை.குழந்தையாய் இருக்கும்போது ஏற்பட்ட ஏதோவொரு மனக்குறைபாடு.தலைவரும் என்ன செய்வார் பாவம்! எவ்வித யோசனையும்,தயக்கமுமின்றி பூச்சிகளின் எதிரியானார்.

கண்ணதாசனுக்கு வயது இருபத்தொன்பது.உயரம் 175 செ.மீ.எடை 87 கி.கி. கறுப்பு நிறம்.மாநிறம் என்று சொல்லிக்கொள்வார்.ஓ பாசிடிவ் வகை ரத்தம்.கண்ணாடி அணிந்திருப்பார்.கழட்டினால் அவருக்கும் கஷ்டம்.நமக்கும் கஷ்டம்.

கண்ணதாசனின் தந்தை கொள்கை பிடிப்பாளர்.பகுத்தறிவுப் பாசறையில் பகுத்தறிவு பெற்றவர்.மகனுக்கு சீர்திருத்தக் கல்யாணமென்று முடிவு செய்தார்.தந்தை சொல் மிக்க மந்திரமேது? அதுவும் போக தனயனுக்கும் பகுத்தறிவாளனாவதில் விருப்பம் தான்.

கண்ணதாசனின் சமூகத்தார் முடிவெடுத்தால் ஆயிற்றா? கீதாதேவியின் தந்தை தமிழ் ஆசான்.பொழுதுபோக்கிற்கு வேலை மற்றபடி வருமானத்திற்கு நிலபுலன்கள் ஏராளம்.குறள் வெண்பாவின் இலக்கணங்களையும்,சூத்திரங்களையும் விரல் நுனியிலோ,நாக்கு நுனியிலோ வைத்திருப்பவர்.இப்போதும் மாமனாரும்,மருமகனும் நேர் நேர் தேமா,நிரை நேர் புளிமா என்று பேசிக்கோள்வார்கள்.பேச்சை எங்கு ஆரம்பித்தாலும் குறள் வெண்பாவில் வந்து முடிப்பார்.இதுவரை 65 குறள்களை புதுக்குறள்கள் என்ற தலைப்பில் எழுதிவிட்டார் இன்னும் 68 குறள்களை எழுதிவிட்டால் 133 குறள்களுடன் தன் செலவில் புத்தகமாக வெளியிட்டுவிடுவார்.அதன்பிறகு படிப்பவர்கள் பாடு.

சடங்கு சம்பிரதாயங்களை வாழ்க்கை முறையாகவும்,நெறியாகவும் கொண்டவர் கீதாதேவியின் தந்தை.இந்தவிதமான திருமண ஏற்பாட்டிற்கு அவர் ஒத்துவரவில்லை.திருமணமே நின்று போகின்ற சூழ்நிலைக்குச் சென்றது.கண்ணதாசனின் தந்தை இதற்கெல்லாம் அசரவில்லை.அவருக்கென்ன?பெண் பார்த்த பொழுதிலிருந்தே இல்லறமென்ற புனிதப் பயணத்தை கண்ணதாசன் தனது மனதில் துவக்கியிருந்தார்.அவர் பாடுதான் திண்டாட்டமாகப் போய்விட்டது.

பலத்த யோசனைக்குப்பின் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும்படியான சமாதானத் திட்டத்தை முன் வைத்தார்.அதன்படி முதல் நாள் விமரிசையாக சீர்திருத்தக் கல்யாணமும்,அடுத்தநாள் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அசீர்திருத்தத் திருமணமும் நடைபெற்றது.

ஊரின் பெரும்புள்ளியான கோணமுதுகு நாயக்கரின் தலைமையில்,ஊர் பெரிய மனிதர்களின் ஆசிர்வாதத்துடன் கண்ணதாசனின் திருமணம் இனிதே நிறைவேறியது. 

இல்லறவாழ்வின் பயனாக மூன்று வயதான அபூர்வா என்ற பெண்குழந்தை.

இன்று அவர்களுக்கு திருமண நாள்.அண்ணா நகரிலுள்ள அரசன் தியேட்டரில் சினிமா பின்பு ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்புவதாய் தீர்மானம்.டிக்கெட் எடுத்தபின் நேரம் நிறைய இருந்ததால் பக்கத்திலுள்ள கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடிவெடுத்தார்கள்.வாங்கிவிட்டு தியேட்டருக்குத் திரும்பும் வழியில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போவோர் வருவோர்க்கு நோட்டீஸ் கொடுத்ததுக் கொண்டிருந்தார்.இவர் கையிலும் ஒன்றைத் திணித்தார்.

அது வேளாங்கண்ணி மாதாவின் அற்புதங்களைப் பற்றிய நோட்டீஸ்.இதைப் படிப்பவர்கள் இது போல் இருநூறு நோட்டீஸ் அடித்தால் லட்சக்கணக்கில் பணம் வந்து குவியுமென்றும் இல்லாவிட்டால் வீட்டிற்கு பெரும் பிரச்சினைகள் மலைபோல்  வந்து சேருமென்றும் கடைசி பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.இப்படிக்கு உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டும் உள்ளம் என்றும் எழுதியிருந்தது.கண்ணதாசன் கோபத்துடன் கிழித்தெறிந்தார்.  

சினிமா தியேட்டரிலேயே அபூர்வா உறங்கிவிட்டாள்.அவர்கள் இருவர் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர்.அவரது செல்போனில் sms வந்திருந்தது.அவரின் அலுவலக நண்பர் அனுப்பியிருந்தார்.

ஷிரிடி சாய்பாபாவின் மேன்மையைப்பற்றி விளக்கி, அந்தச்செய்தியை 21 நபர்களுக்கு அனுப்பவேண்டுமென்றும் அனுப்பினால் அற்புதங்கள் நிகழுமென்றும்,அப்படிச் செய்யாமல் அழித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்குமென்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.திட்டிக்கொண்டே smsஐ செல்போனிலிருந்து நீக்கினார்.

படம் பார்த்துவந்த அசதியில் சீக்கிரமே உறங்கிப் போனார்கள்.சாப்பிடாமல் தூங்கிய அபூர்வா பசியால் காலை ஐந்து மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து அழத்துவங்கினாள்.குழந்தை வளர்ப்பை தம் வாழ்வின் தலையாய லட்சியமாகக் கொண்ட கண்ணதாசனும் சுறுசுறுப்பாக எழுந்துகொண்டார்.மனைவி தோசையை சுட்டுத்தர அற்புதாவுக்கு கதை சொல்லி ஊட்ட ஆரம்பித்தார்.

நமது நண்பர் கரப்பான் உற்சாகமாகத் திரிகின்ற நேரமிது.அவருக்குத் தெரியுமா அபூர்வா திடீரென்று அழுவாள். முழிப்பாளென்று.இவர்களின் நடமாட்டத்தைப் பார்த்ததும் ஓடி ஒளியப் பார்த்தார்.அதற்குள்ளாக பூதக்கண்ணாடி அணிந்திருக்கிற கண்ணதாசனின் கண்களில் மாட்டிக்கொண்டார்.

கோபம் தலைக்கேற கரப்பானைக் கொல்வதற்கு வசதியான பொருளைத் தேடினார்.ஒன்றும் அகப்படவில்லை.கதவோரமாய் கரப்பான் பதுங்கினார்.ஒரு கையில் அபூர்வாவை வைத்துக்கொண்டு மறு கையால் கொஞ்சம் கனமான மிதியடியை(door mat) எடுத்து பலங்கொண்டமட்டும் ஓங்கி வீசினார்.கையிலிருந்து நழுவி வசமிழந்து கரப்பானிலிருந்து தூரமாய் விழுந்தது.வசமிழந்ததால் கை இலக்கின்றிப் போய் கதவின் கைப்பிடியில் பலமாக மோதியது.

கைக்கு பலத்த சேதாரம்.வலியில் கத்திக்கொண்டே குழந்தையை கீழே இறக்கிவிட்டுவிட்டு அதே மிதியடியால் கரப்பானைக் கொன்றார்.

கையிலிருந்து ரத்தம் ஊற்ற ஆரம்பித்தது.அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றார்.பலத்த எலும்பு முறிவு.கை சரியாவதற்கு நாற்பது நாட்களுக்கு மேலானது.

எவரின் கருணையால் இது நடந்தது என்று தீர்மானிக்க முடியாமல் முடி காணிக்கை செலுத்துவதற்காக வேளாங்கண்ணிக்கும்,சாய் பாபாவை தரிசிப்பதற்காக புட்டபர்த்திக்கும் குடும்பசகிதமாகச் சென்றார்கள் கண்ணதாசன் தம்பதியர். 

ஜனவரி 31, 2008

எழுதுபவனின் எழுத்து

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 11:03 நான்
Tags:

தமிழ் கூறும் நல்லுலகத்தால் ஆ.ஜெ.என்றழைக்கப்படுகிற எழுத்தாளர் ஆதவ் ஜெய்க்குமார் ”துணை” இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் நான் எழுதுகின்ற கதைகளில் தமிழைவிட ஆங்கிலமும்,வடமொழிச்சொற்களும்,என் தாய் மொழியான மலையாளமும் தான் மேலதிகமாகக் காணப்படுவதாகவும்,தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழ்த்தாயின் கற்பை சூறையாடுவதற்குப் பதிலாக இந்தியிலோ,மலையாளத்திலோ நான் எழுதுகின்ற குப்பைகளைக் கொட்டினால் தமிழுக்கு நான் செய்கின்ற மிகப் பெரிய சேவையாக இருக்குமென்றும்,அதற்கும் மேலாக நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் உலகமே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது போலவும் பதிலளித்திருந்தார்.

கண்களில் தீட்சண்யமும்,முகத்தில் தேஜஸும்,நாவில் சரஸ்வதியும் குடியிருப்பதாக சுய விளம்பரத்தின் மூலம் தமிழர்களின் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்ட ஆ.ஜெ. அது சரி ஆஜே தமிழ் தானா?  ஆதவன்  வெற்றிக் குமரன் என்றோ சூரிய வெற்றிக் குமரன் என்றோ பெயரை வைத்துக் கொள்ளலாம் தானே?

இந்த ஆ.ஜேக்களோ,ஆ.ஜோக்கர்களோ பெயரை மாற்றவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று என் சக எழுத்தாளர் நாகராஜன் போன்றோர் சொல்லித் தெரிந்து கொள்ளும் நிலையிலும் நான் இல்லை என்றவாறு நமது எழுத்தாளர் கனகசபை பதில் எழுத ஆரம்பித்திருந்தார்.

எழுத்தாளர் என்றவுடன் ஐம்பதுக்கு மேலான வயதில் தீர்க்கமான கண்களுடைய மகான் போன்ற பிம்பத்தை மனதில் நிறுத்த முயற்சி செய்யாதீர்கள்.நமது கனகசபைக்கு முப்பத்திமூன்று வயது தான்.நோஞ்சான் ஆசாமி.உருவத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை.வாசக விசிறிகள் அவரைப் பற்றிய ஏதேனும் உருவகத்தை மனத்திரையில் பதிந்து வைத்திருக்கலாம்.அதைப்பற்றி நமக்கு அக்கறையில்லை.

மற்றபடிக்கு ஆசாமி எழுத்தை தவமாகவோ,லட்சியமாகவோ கொள்கின்ற ஆளும் கிடையாது.சிறுவயதிலேயே ரசிக்கும்படி கதை நன்றாக விடுவார்.அதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தார்.மற்றபடி இவர் தான் ஆதர்சம் அவர் தான் குரு எனபது போன்ற குழப்பங்களும் அவருக்கில்லை.

காப்பியங்கள் படைப்பதோ,காவியங்கள் இயற்றுவதோ தனது வேலையில்லை என்ற அளவில் அவருடைய எழுத்துப்பணி இருந்தது.பேசுவதும் எழுதுவதும் அவருக்குப் பிடித்திருந்தது அதனால் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இதையும் மீறி அவருக்கென்று வாசகர் வட்டமும்,எதிர்ப்பதற்கென்று ஆ.ஜெ.போன்ற எழுத்துச் சக்கரவர்த்திகளும் இருந்தார்கள். 

எல்லோரையும் போல வயிற்றுக்கடவுளுக்காக அவரும் ஒரு வேலையில் இருந்தார்.பூனாவில்.தமிழனை தமிழன் ஆதரிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட முதலாளியிடம் கேஷியர் வேலை.கனகசபைக்கு அதைவிட அதிகமாய் சம்பளம் தருகிற,உபத்திரவம் தராத  சேட்டுக்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது தெரிந்திருந்தபடியால் தமிழனிடமே வேலை செய்தார். எல்லோரையும் போல் நண்பர்களும்,உறவினர்களும் அவருக்கிருந்தார்கள்.மனைவியும் இருந்தார்.அவரது எதிர்பார்ப்புக்கும் மேற்பட்ட அறிவும்,அழகும்,அன்புமுடைய மனைவி.ஒரேயொரு குறை.குழந்தையில்லை.அதிலும் அவருக்குப் பெரிய வருத்தமில்லை.மனைவிக்குத்தான் கவலை.அதனால் அவருக்கும்  வருத்தம்.

தேவைகள் குறைவாக இருந்ததாலும்,மனைவி செலவாளியில்லை என்பதாலும்,போதை வஸ்துக்களான சிகரெட்,விஸ்கி,பிராண்டி போன்றவற்றின் பரிச்சயமின்மையாலும் அவரது வருமானம் போதுமென்பதற்குச் சற்று அதிகம் என்றே கொள்ளவேண்டும்.

வேலையும் மாதத்தின் முதல் வாரத்தைத் தவிர பெரிதாக சிரமமாக இருக்காது.அதனால் அவரது எழுத்துப்பணி பெரும்பாலும் அலுவலகத்திலேயே முடிந்துவிடும்.

சாயங்கால வேளைகளில் நண்பர்கள் பெரும்பாலும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.அதில் அவரது மனைவிக்கும் சந்தோஷமே,அந்த நீக்ரோவைத் தவிர.அவனுடைய உருவமும், பாவனைகளும்,பழக்கவழக்கங்களும் அம்மணிக்குப் பிடிக்கவில்லை.அவரின் இங்கித வரையறைகளுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தான்.காலப்போக்கில் அம்மணிக்கு அதுவும் உறுத்தலாக இல்லை.

நமது எழுத்தாளர் ஒன்றும் விசேஷமான நிறத்தில் எல்லாம் இல்லை.சிறுவயதில் அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அண்டங்காக்கா ஹர்ர்ர்ர்ன்னுச்சாம் என்று சத்தமாக குரலெழுப்பிவிட்டு ஓடிவிடுவார்கள் அவருடன் படித்த நண்பர்கள். 

நீக்ரோவைத் தவிர இரண்டு மராட்டியரும் ஒரு தெலுங்கரும் எழுத்தாளரின் நண்பர் வட்டம்.இவர்களது சந்திப்பு பெரும்பாலும் எழுத்தாளரின் வீட்டில் நிகழும்.அவரது மனைவியும் அவ்வப்போது இவர்களின் பேச்சில் கலந்து கொள்வார். இந்த ஐவரின் நட்பும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி வளர்ந்தது என்று தமிழறிஞர்கள் வர்ணிக்கும் விதத்தில் இருந்தது.

எழுத்தாளருக்கு எழுதுவதைப் போலவே பேசுவதும் கைவந்த கலை.அவருக்கு பேச்சு தருகின்ற போதையுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது.அதனால் தான் உலகத்தால் போதைப் பொருட்கள் என்று மொழியப்பட்ட வஸ்துகளுடன் அவருக்கு தொடர்பில்லாமல் போயிருக்க வேண்டும்.ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் போதை.

இவ்வளவு சந்தோஷமான மனிதன் வாழ்வில் ஒரேயொரு குறையை வைத்து, அதனால் அவனது ஏச்சுக்கும பேச்சுக்கும் ஆளாக  இறைவன் விரும்பவில்லை போலும்.அம்மணி உண்டானாள்.

அம்மணியும்,எழுத்தாளரும் வாழ்க்கை தரும் இன்பத்தின் உச்சத்தைக் கண்டார்கள்.அம்மணியின் வயிறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அம்மணிக்கு பெண் குழந்தை மேலும்,எழுத்தாளருக்கு ஆண் குழந்தை மேலும் ஆசை இருந்தது. பிறக்கப் போகின்ற குழந்தைக்கு பலவிதமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.அழகான பெயர்கள்,அசட்டுத்தனமான பெயர்கள்,அர்த்தமற்ற பெயர்கள் என்று முடிவின்றி சந்தோஷமாக நாட்கள் கழிந்தன.

ஒரு சுபதினத்தில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த குழந்தை பிறந்தது.தாயும்,சேயும் நலம்.சுகப் பிரசவமும் கூட.

எழுத்தாளரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ஆண்குழந்தை பிறந்தது.குழந்தை அவரையே உரித்து வைத்தது போல இருந்தது.

எழுத்தாளர் விரும்பிய பெயரை அம்மணியும் ஏற்றுக் கொண்டார்.குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

அம்மணியின் ஆசைப்படி குழந்தையின் முதலாண்டு பிறந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

And they lived happily ever after.

பி.கு;

நடந்ததென்னவோ வேறு. அடர்ந்த சுருள்முடியுடனான பெண்குழந்தை பிறந்திருந்தது.

குழந்தை ஆப்பரிக்க கருப்பினத்தவரின் ஜாடையில் இருந்தாள். 

இறைவனின் திருவிளையாடல் இது போல் இருந்தாலும்,எழுத்தாளர் கனகசபையின் சந்தோஷத்தில் குறுக்கிட நாம் விரும்பவில்லை.  

ஜனவரி 28, 2008

நடவண்டி

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 11:11 நான்
Tags:

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆறு மணிக்கே சண்முகத்தின் தூக்கத்தை மேரி கலைத்துவிட்டிருந்தாள்.உறக்கம் கலைந்தாலும் படுக்கையிலிருந்து அவன் எழவில்லை.டீக்கடைப் பையன் எழுப்பிய பிறகே எழுந்தமர்ந்தான்.போதை தெளியாமலும்,தூக்கத்திலிருந்து விடுபடாமலும் டீயை லேசாக உறிஞ்சி விட்டு பீடியை பற்ற வைத்தான்.டீயையும்,பீடியையும் குடித்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டான்.

யோவ் எந்திரிய்யா, ஞாயித்துக்கிழமை அதுவுமா இன்னமும் தூங்கிட்டு இருக்க,அங்க ஒரே கூட்டமா இருக்கு என்று சொல்லிக்கொண்டே சண்முகத்தை படுக்கையிலிருந்து இழுத்து,தூக்கி நிற்க வைத்தான் குமார்.சண்முகத்தைத் தூக்குவதற்கு மலை போன்ற தோள்களுடைய குகனோ,ஆஜானுபாகுவான பீமனோ தேவையில்லை.கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் தூக்கிவிடக் கூடிய உடல்வாகு தான் சண்முகத்திற்கு இருந்தது.

அறிவு கெட்ட நாயே, மாதர்சோத்,போசடிக்க என சண்முகம் கத்த ஆரம்பித்தான்.அவன் கத்தியதை குமார் பொருட்படுத்தவில்லை.அவன் கத்திய வார்த்தைகளுக்கு பொருள் படுத்த முயற்சித்தாலும் எவ்விதமான பிரயோஜனமுமில்லை என்று குமாருக்குத் தெரிந்திருந்தது. நடவண்டியின் உதவியுடன் கத்திய வார்த்தைகள் கரைவதற்கு முன்பாகவே தனது இருப்பிடத்திலிருந்து பந்தலை நோக்கி சண்முகம் நகர ஆரம்பித்தான்.

நடவண்டி என்றவுடன் என்னவோ,ஏதோவென்று நினைத்துவிடவேண்டாம். தலைகீழ் U -வடிவிலான இரண்டு இரும்புக்கம்பிகளுக்கு இடையே ஒரு அகலமான தட்டால் இணைக்கப்பட்ட நடப்பதற்கு வசதியான ஊன்றுகோல் மாதிரியானதொரு சாதனம் அவ்வளவுதான். சண்முகம் அதை நடவண்டியென்று அழைத்ததால் அது நடவண்டி இல்லாவிட்டால் வேறுமாதிரி அழைக்கப்பட்டிருக்கக்கூடும்.

பந்தலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது.சண்முகம் அவனது பிரத்யேகமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.நீண்ட கிருதாவும்,நேர்த்தியான ஹேர்ஸ்டைலும் கறுப்பு கூலிங்கிளாஸும் அணிந்த  ஒரு இளைஞன் சண்முகத்திடம் வெளிறிய பச்சை நிறத்திலிருந்த சீட்டை நீட்டினான்.அதை வாங்கி என்னவென்றே பார்க்காமல் அருகிலிருந்த உடைந்த பிளாஸ்டிக் டப்பாவில் போட்டான்.சண்முகம் காட்டிய பாவனைகளைப் புரிந்ததுகொண்டு அவனுக்கு முன்னாலிருந்த உயரம் குறைவான ஸ்டூலில் இளைஞன் அமர்ந்துகொண்டான்.

ஒரு கையால் இளைஞனின் தலையைத் தரையைப் பார்க்கும்படி அழுத்திவிட்டு மறு கையால் குவளையிலிருந்த தண்ணீரை இளைஞனின் தலையில் தெளித்தான். சவரக்கத்தியால் இளைஞனின் தலையை மழிக்க ஆரம்பித்தான்.பலவருடப் பழக்கத்தால் லாவகமாக ஐந்தே நிமிடத்தில் இளைஞனை மொட்டையாக்கிவிட்டான்.

பந்தலைச் சுற்றிலும் விதவிதமான மொட்டைகள் காணப்பட்டன.ஒரு வயசு மொட்டை,அரை டவுசர் மொட்டை,ஆம்பளை மொட்டை,பொம்பளை மொட்டை,கிழவன்-கிழவி மொட்டை,படித்த மொட்டை,படிக்காத மொட்டை மற்றும் இன்னபிற மொட்டைகளுடன் ஒரு சிறிய மொட்டைச் சமுதாயமே உருவாகியிருந்தது.உறவினர்கள் மொட்டைகளை தங்களது கேமராவில் பல கோணங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

சண்முகத்திற்கு இடப்பக்கமாக குமாரும்,அவனையடுத்து மேரியும் மொட்டையடிப்பதில் தீவிரமாக இருந்தனர்.சண்முகம்,மேரியின் கைப்பிடித்து இருபத்தியிரண்டு வருடங்களானாலும் திருமணம் என்ற ஒன்றைச் செய்துகொண்டது பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு மேரியின் வயிற்றில் குமார் உருவானபோது தான். 

பதினான்கு பதினைந்து வயதிருக்கும்போது ஊரைவிட்டு ஓடி வந்து தற்செயலாக மொட்டையடிக்க ஆரம்பித்து கடந்த முப்பது வருடங்களில் தேர்ந்த சவரத்தொழிலாளியாகி விட்டான்.

வழக்கம்போல் ஒன்பது மணிக்கு இருந்த இடத்திலிருந்தவாறே இரண்டு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.இன்று கோயிலுக்கு வந்த பக்தர்களில் அநேகம்பேர் மொட்டையாகும் முடிவுடன் வந்தபடியால்,பதிவாக மதியம் ஒரு மணிக்கு வேலையை முடிப்பவன் கொஞ்சம் தாமதமாக இரண்டு மணியைப்போல் முடித்துவிட்டு தனது இருப்பிடத்திற்கு நகர ஆரம்பித்தான்.

அவனது இருப்பிடம் என்பது பந்தலிலிருந்து இருநூறடி தூரத்தில் இருக்கிற அரச மரத்தடியிலுள்ள ஆங்காங்கே நைந்துபோன ஒரு பழைய டேப் கட்டிலும்,கைகளும்-முதுகைச் சாய்ப்பதற்கான பகுதியும் உடைந்து போன ஒரு நாற்காலியும் தான்.உடல் வேட்கையை தீர்ப்பதற்காகவும்,மழை நேரங்களிலும் தான் அவர்களின் குடிசைக்கு ஒதுங்குவான்.

அவனது ஆஸ்தான கட்டிலில் அவனது வயிற்றுக்கும் நாவுக்கும் சேவை செய்கின்ற,மேரி வைத்துவிட்டுச் சென்ற சாப்பாட்டுத் தூக்கு சண்முகத்தை வரவேற்றது.கட்டிலில் அமர்ந்து கொண்டே தூக்கை திறந்து பார்த்தான். ரச சாதமும்,அவனுக்குப் பிடித்தமான விளமீன் வருவலும் இருந்தது.

தனது லுங்கியில் சுருட்டி வைத்திருந்த சாராய பாட்டிலைத் திறந்து குடிக்கத் தொடங்கினான்.சாப்பிடுவதும்,குடிப்பதும்,இடையிடையே உலகத்தைப் பார்ப்பதுவுமாக சாப்பாட்டை முடித்தான்.

அந்தப்பக்கமாக பைக்கில் வந்த அறம் செய்ய விரும்பிய மனிதர் ஏழெட்டு சாப்பாட்டுப் பொட்டலங்களை தெருவில் அவர் கண்களுக்கு பரிதாபமானவர்களாகப் பட்டவர்களிடம் கொடுத்துச் சென்றார்.ஏற்பது இகழ்ச்சி போன்ற ஆத்திசூடிகளை சண்முகம் அறியாததால் அவனும் ஒரு பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டான்.

சண்முகத்திற்கு களைப்பாகவும்,கிறக்கமாகவும் இருந்தது.கட்டிலில் படுத்துக்கொண்டான்.

பொதுவாக இது போன்ற சமயங்களில் கஞ்சாவும் அடித்துவிட்டு வாயில் வருவதை உளறிக்கொண்டும்,போவோர் வருவோரை நாம் கெட்ட வார்த்தையென்று சொல்லும் வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டும் இருப்பான்.இன்று மக்களின் அதிர்ஷ்டமோ என்னவோ அவன் அந்த மனநிலையில் இல்லை.

மேரியுடனான உடல் தொடர்பை விட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது.அவன் கண்ணால் மேரி அந்த சைக்கிள் கடை அன்புவிடம் படுத்திருந்ததை பார்த்தபிறகு சண்முகத்தின் ரோஷம் அதற்கு இடங்கொடுக்கவில்லை.அவளும் அதற்காக பெரிதாகக் கவலைப்படவில்லை.அவளுக்கு அது வசதியாகவே இருந்தது.

மாதத்திற்கு ஒருமுறையோ,இருமுறையோ உடல் தேவையைப் பொறுத்து ரம்பையோ,ஊர்வசியோ,ராக்காயியோ,மூக்காயியோ நூறு ரூபாய்க்குள்ளாக ஏதோவொரு மகராசியிடம் தேவையை தணித்துக்கொண்டு வந்துவிடுவான்.

பைக்கில் வந்த ஒருவன் இடித்து, நடப்பதற்கு சிரமமான பிறகு கடந்த நான்கு மாதங்களாக அதுவுமில்லை.அவ்வப்போது உடலும்,மனமும் பரபரத்தாலும் சென்று வருவதற்கு உடல்நிலை இடங்கொடுக்கவில்லை.  

தூக்கம் கலைந்து பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே எழுந்தான்.இருட்ட ஆரம்பித்திருந்தது.

ஏ சண்முகம் பீடி இருந்தாக் குடு  என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் வந்தமர்ந்தான் பக்கத்து வீட்டு  மாரியப்பன்.

போடா ங்கோத்தா உனக்காகத் தான் வாங்கி வச்சுருக்காங்க.மயிரு காசு கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று சொல்லிக் கொண்டே ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தான்.

ஊர்,உலக விஷயங்களைப் பற்றி பேச்சு தடையில்லாமல் சென்றது.இடையில் பீடிகளும் போய்க்கொண்டிருந்தன,பொழுதும் போய்க்கொண்டிருந்தது.மாரி சாப்பிடச் செல்வதாக்க் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்

பாட்டிலில் மீதி வைத்திருந்த சரக்கைக் குடித்துவிட்டு பார்வையை முதலில் தெற்கு வடக்காக வீசினான். பிறகு அவனையறியாமலே மேற்கில் கண்கள் நிலை பெற்றன.

யோவ் மழை வர்ற மாதிரி இருக்கு வீட்ல வந்து படு என்றான் குமார்.

ஒரு மசுரும் வராது.சாப்பிட்டுப் போட்டுத் தூங்கு என்றான்.

சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.வேகமாய் நகர்ந்து வீட்டிற்குச் சென்றான்.

குமாருக்கும்,சண்முகத்திற்கும் மேரி உணவு பரிமாறினாள்.சாப்பிட்டுவிட்டு சண்முகம் படுத்துக் கொண்டான்.குமார் அவனது நண்பனுடன் சினிமாவிற்கு போவதாகச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

சண்முகத்திற்கு உறக்கம் கைகூடவில்லை.புரண்டு படுத்தான்.உடல் தேவை படுத்த ஆரம்பித்தது.எண்ணங்களும் அதனுடன் சேர்ந்து விளையாடத் தொடங்கியது.

திரும்பிப்  பார்த்தான்.மேரி சற்றுத் தள்ளி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடினான்.உடலில் மேலும் வெப்பம் பரவ மனது தன் கட்டுக்குள் அடங்காத நிலையில் எழுந்து மேரியின் அருகில் சென்று படுத்தான்.மேரி கண்களைத் திறந்து பார்த்தாள்.அவள் கண்களில் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை.

ஜனவரி 14, 2008

Animal Farm by George orwell

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 11:44 நான்

animal-farm.jpg

விலங்குகளைக் குறியீடாக வைத்து அங்கதநடையில் எழுதப்பட்டது இந்த நாவல்.கம்யூனிசத்தை கிண்டல் செய்து அரசியல் நையாண்டியாக எழுதியதுதான் ஆர்வெலின் நோக்கமாக இருந்தாலும்,கதை முழுக்க விரவிக்கிடக்கிற நக்கல் தொனி கதையைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமூட்டுவதாக அமைந்தது.

எந்தவிதமான கடினமான வேலையையும் செய்யாத,எதையும் கஷ்டப்பட்டு,உழைத்துப் பெருக்காத மனிதன் நமது உழைப்பின் பயனை சந்தோஷமாக அனுபவித்து வருகிறான்.இனிமேல் நாம் நமக்காக உழைப்போம்,நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று ஜோன்ஸ் என்பவனது பண்ணையிலிருக்கும் விலங்குகள் முடிவு செய்து ஜோன்ஸையும் அவனைச் சார்ந்தவர்களையும் பண்ணையிருந்து விரட்டியடிக்கின்றன.அன்றிலிருந்து அது விலங்குகளால் நடத்தப்படும் விலங்குப் பண்ணையாகிறது.அது திரும்பவும் தனியொரு நபரின்(விலங்கின்) அதிகாரத்தின் கீழ் எவ்வாறு வருகிறது என்பதை சுவைபடக் கூறியுள்ளார்.

விலங்குகள் தங்களது வெற்றியை நிலைநாட்டியதோடு தங்களை அடிமைகளாக நடத்திய மனிதர்களுக்கெதிராகவும்,தங்களது நல்வாழ்வுக்காகவும் தங்கள் இனம் இருக்கும் வரையிலும் கடைப்பிடிப்பதற்கான ஏழு கட்டளைகளை வகுத்துக் கொள்க்கின்றன.அந்தக் கட்டளைகள்:

1.இரண்டு கால்களில் நடப்பவை நமது எதிரிகளாகட்டும்.

2.நான்கு கால்களில் நடப்பவை மற்றும் றெக்கை இருப்பவை நண்பர்களாகட்டும்.

3.விலங்குகள் உடை அணியாதிருப்பதாக.

4.விலங்குகள் மெத்தையில் படுக்காதிருப்பதாக.

5.விலங்குகள் மதுபானங்கள் அருந்தாமலிருப்பதாக.

6.எந்த விலங்கும் ஏனைய விலங்கினைக் கொல்லாதிருப்பதாக.

7.அனைத்து விலங்குகளும் சரிநிகர் சமானம்.

கதையில் வரும்,  விலங்குகளின் சுதந்திர கீதமாகட்டும்,ஏழு கட்டளைகளாகட்டும் அந்தக் கட்டளைகளை தலைமை விலங்கு தனது தேவைக்கு மாற்றிக் கொள்வதிலாகட்டும் நம்மில் ஒரு மென்னகையை தன்னிச்சையாக தோற்றுவித்து விடுகிறது.

சொல்லவந்ததை பூடகமாகத் தெரிவித்து கதை நெடுக நகையுணர்வு மேலோங்க எழுதப்பட்டதால் படித்தபிறகும் சுவை மனதில் தங்கியிருக்கிறது. 

ஜனவரி 8, 2008

The Alchemist by Paulo Coelho

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 12:40 பிற்பகல்

அறுபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நான்கு கோடிக்கு மேற்பட்ட பிரதிகளை விற்றுக் குவித்த புத்தகம் இது.முதலில் கதையை சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

” சான்டியாகோ என்ற  இளைஞன் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்.குடும்ப கௌரவம் மற்றும் பெருமையை  நிலைநாட்டுவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் அவனை பாதிரியாராக்க அவனுடைய பெற்றோர் தீர்மானிக்கிறார்கள்.அவனும் செமினரியில் சேர்ந்து படிக்கிறான்.கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை விட உலகைப் பற்றி அறியும் ஆவல் அவனுக்கு அதிகமாக இருந்தபடியால் அவனுடைய பெற்றோரிடம் அனுமதி பெற்று ஊர் சுற்றுவதற்கு தோதாக ஆடு மேய்ப்பவனாகிறான்.

இரண்டு வருடங்களாக பல இடங்களுக்கு ஆடுகளை மேய்ப்பதற்காகச் செல்கிறான்.பயணத்தின்போது ஓர் நாள் இரவை பாழடைந்த சர்ச்சில் கழிக்கிறான்.முன்பொருமுறை வந்த கனவொன்று திரும்பவும் வருகின்றது..கனவில் ஒரு குழந்தை அவனது ஆடுகளிடம் விளையாடுகிறது.திடீரென்று அவனது கையைப் பிடித்து இழுத்து  எகிப்து பிரமிடுக்கு அழைத்துச் செல்கிறது.அங்கே மறைவாயிருக்கின்ற மிகப் பெரிய புதையலை காட்டுகிறேன் என்று அந்தக குழந்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது கனவிலிருந்து விழித்துவிடுகிறான். 

கனவுக்கு விளக்கம் சொல்வதில் பிரபலமான ஜிப்சி கிழவியிடம் குறி கேட்கிறான்.பெரும் புதையலொன்று அவனுக்காக பிரமிடுகளுக்கருகில் காத்துக் கிடப்பதாகக்  கூறுகிறாள்.விளக்கம் சொன்னதற்கு சன்மானமாக அவனுக்கு கிடைக்கும் புதையலில் பத்தில் ஒரு பங்கை தரவேண்டுமென்று அவள் கேட்கிறாள்.அவனும் சம்மதிக்கிறான்.செல்லும் வழியில் ஒரு வயதானவரை சந்திக்கிறான்.அவராகவே அந்தப்பையனைப் பற்றிய சகல விஷயங்களையும் கூறிவிட்டு அவனுக்கு கிடைக்க இருக்கிற புதையலைப் பற்றியும் சொல்கிறார்.

அவனது ஆடுகளை விற்றுவிட்டு புதையலை நோக்கிப் புறப்படுகிறான்.ஆடுகளை விற்றுக் கிடைத்த பணத்தை முதல் நாளே ஒருவனிடம் ஏமாந்து இழந்துவிடுகிறான்.வேறுவழியின்றி படிகப் பொருட்களை விற்கும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து பணம் சம்பாதித்து பிரமிடுகளை நோக்கி தனது பயணத்தைத் துவக்குகின்றான்.வழியில் ரசவாதியாக விரும்புகின்ற ஒரு ஆங்கிலேயனை சந்திக்கிறான்.பாத்திமா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.பாலைவனத்தில் பல இன்னல்களை நேர் கொள்கிறான்.200 வருடங்களாக உயிர் வாழ்கிற ரசவாதியின் உதவியுடன் புதையலை கண்டடைகிறான்.”

இந்த நாவலை ஒரு சாகசக் கதையென்று சொல்லமுடியாது.சுயமுன்னேற்ற,சுய உதவிக் கருத்துக்களுடன்,கண்ணுக்குப் புலப்படாத மாய சக்தி,எழுதி வைக்கப்பட்ட விதி முதலான தத்துவார்த்தமான விஷயங்களுடன் தரப்பட்ட  கதை என்று கூறலாம்.

வாழ்வில் ஒரு முறை நிகழ்ந்த எதுவும் மறுமுறை நிகழாது அதையும்மீறி நிகழ்ந்தால் கண்டிப்பாக மூன்றாவது முறை நிகழ்ந்தே தீரும் என்பது போன்ற உலக நியதிகளையும்,விதிகளையும் கதை மூலமாக அறியத்தருகிறார்.

‘உங்களிடம் மிகப் பெரிய பொக்கிஷம் இருக்குமானால் நீங்கள் அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல முற்படுவீர்களானால் அரிதாகவே மற்றவர்கள் உங்களை நம்பவோ புரிந்து கொள்ளவோ செய்வார்கள்’ என்பது போன்ற சிந்தனைகளை பதிவு செய்திருக்கிறார்.அவருடைய இந்தக்  கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் புத்தகம் இன்னமும் விற்பனையில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 

மென்மையான இதயம் படைத்தவர்களும்,சுயமுன்னேற்ற நூல்கள் படிப்பவர்களும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

டிசம்பர் 18, 2007

S.M.G.குரியன் அவர்களின் டோரா

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 11:19 நான்
Tags:

அடையார் சாஸ்திரி நகரிலிருக்கிற பல குறுக்குத் தெருக்களிலும்,பிரதான சாலைகளிலும்,சந்துகளிலும் மிக முக்கியமான ஒன்று சாஸ்திரி நகர் 37வது குறுக்குத் தெரு.முக்கியம் அதன் நீள அகலத்தைப் பொறுத்தோ அது இருக்கின்ற இடத்தைப் பொறுத்தோ ஏற்பட்டதல்ல.ஐந்து வீடுகளைக் கொண்ட பல வருடங்களாக சுண்ணாம்பு அடிக்காமல் வெளிறிப்போன ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் ஒரே ஒரு பங்களாவும் தான் அந்தத் தெருவில் இருந்தன.எட்டடி அகலமும் முப்பதடி நீளமும் கொண்ட அந்த சிறிய பாதைக்கு தெரு என்று நாமகரணம் சூட்டிய அந்த கனவானை சந்திக்க சேர்ந்தால் கட்டிப் பிடித்து முத்தமிட்டு கைகுலுக்கி எனது அன்பையும் மரியாதையையும் தெரிவிக்க வேண்டும்.

அந்தத் தெருவிற்கு முற்றிலும் பொருத்தமில்லாத பங்களாவில் தான் S.M.G.குரியன் அவர்களும் அவர்களது மனைவியும் வசித்து வருகிறார்கள்.அவர்களது மகனும்,மகளும் திரைகடலோடியும் திரவியம் தேட ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்கள்.பிழைப்பு தேடி மெட்ராஸ் வந்த நானும்,என் மனைவியும்,ஐந்து வயதாகிற எனது ஆருயிர் மகனும் இந்த எழில் கொஞ்சும் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் கடந்த மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்.தெருவின் முக்கியத்துவம் இப்பொழுது உங்களுக்கு புலப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.புரியாதவர்கள் தங்களுக்கு பொதுப்புத்தி மிகக் குறைவு என்பதை உணர்ந்து கொண்டு சந்தோஷமாக மேற்கொண்டு வாசிக்கவும்.

குரியன் அவர்களுக்கு அறுபது வயதுக்கு மேற்பட்ட ஏதோவொரு வயது.காலையில் வெயில் பரவ ஆரம்பித்த பிறகு ஏழுமணிக்கு மேல் வாக்கிங் கிளம்புவார்.கையில் ஒரு அடி நீளத்தில் கைத்தடி ஒன்று வைத்திருப்பார்.தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டு ஒரு மணிநேரம் நடந்துவிட்டு வீடு திரும்புவார்.அருகில் நடந்து போனாலும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்று அவ்வளவு எளிதாக கிரகித்துக் கொள்ள முடியாது.பேசுவதற்காகவே வாக்கிங் போய்க் கொண்டிருந்ததால் அவருடைய பேச்சின் வேகமும் சத்தமும் கூடியிருந்ததே ஒழிய அவரது தொப்பை மூன்றுவருடத்திற்கு முன்பு பார்த்த நிலையிலேயே இருந்தது.

குரியன் அவர்களின் வீட்டில் காலை எட்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை இருக்கிற டிரைவரும், ஒரு முழுநேர தோட்டக்காரனும்(எலக்ட்ரீஷியன்,வாட்ச்மேன்,பிளம்பர்,கார்ப்பென்டர் என்று அந்த வீட்டின் சகலவிதமான வேலைகளையும் செய்யக்கூடிய எனக்குத் தெரிந்த ஒரேயொரு அஷ்டாவதானியோ பத்தாவதானியோ அவன் தான்) வேலை பார்க்கின்றனர்.இது போக ஒரு வளர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டும்,எந்த இனத்தைச் சேர்ந்தது என்று என்னால் கணிக்க இயலாத ஒரு குட்டி நாயும் இருக்கின்றன.குட்டி நாயின் பெயர் டோரா.

என் மகன் என்னையும் என் மனைவியையும் போலில்லாமல் அதீத சுறுசுறுப்பும் புத்திக் கூர்மையும் உடையவன்.நன்றாக படிப்பான்,விளையாடுவான்,பாட்டுப் பாடுவான்.ஒருவன் ஒருவன் மலையாளி உலகில் மற்றவன் கொலையாளி என்று பாடல் வரிகளை தவறாகப் பாடினாலும் ஏற்ற இறக்கங்களோடு மிக அழகாகப் பாடுவான்.அவனுடைய வயதில் இவ்வளவு அழகாக ஆட,பாட,படிக்கத் தெரிந்தவர்கள் இல்லையென்று நான் மட்டுமில்லை என் அம்மா,அப்பா என அனைவரும் கூறுவார்கள்.

இவ்வளவு நல்ல பையன் ஒரேயொரு விஷயத்தில் எங்களை படுத்திவிடுவான்.ஒழுங்காக சாப்பிட மாட்டான்.சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.பாட்டுப் பாடி,டான்ஸ் ஆடி விழுந்து புரண்டு பல்டி அடித்து ஊட்டி விட வேண்டும்.சமயத்தில் எங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்து டோராவை குரியன் அவர்களின் வீட்டுக்கு வெளியே விட்டிருப்பார்கள்.அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் டோராவுடன் விளையாடிக் கொண்டே வேகமாக சாப்பிட்டு விடுவான்.டோராவுக்கும் என் மகனை பிடித்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.இருவரும் வெகு நேரத்திற்கு ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

இதே போல் பத்து நாட்களுக்கு முன்பு டோராவும் என் மகனும் விளையாடும் போது டோராவை எதற்காகவோ விலக்கப் போக அவன் தள்ளி விடுகிறான் என்று நினைத்து லேசாக கடித்து விட்டது.அவன் அழுவதைப் பார்த்து நான் பதறி விட்டேன்.அவனது சத்தத்தைக் கேட்டு பயந்து டோரா வீட்டுக்குள் ஓடிவிட்டது.

நான் அவசரஅவசரமாய் என் மகனை கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனேன்.வழக்கம்போல் கூட்டம் அதிகமாக இருந்தது.ஒருமணி நேரம் கழித்துத் தான் டாக்டரை பார்க்க முடிந்தது.

டாக்டர் என்ன ஆச்சு?என்று கேட்டார்.பதில் சொல்வதற்குள் அவருக்கு செல் போனில் அழைப்பு வர ஜாதகம் நாளைக்குத் தரேன்,பையன் அமெரிக்காவில தான் இருக்கான் என்று போன் பேசியவரது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்.

வெகு நேரம் நிதானமா பேசி முடித்துவிட்டு ம் என்ன ஆச்சு என்று திரும்பவும் கேட்டார்.நாயிடம் விளையாடும் போது பையனை நாய் கடித்துவிட்டது என்று சொல்லி அவன் கையை காண்பித்தேன்.

இரத்தம் வந்ததா? என்று கேட்டார்.

இல்ல சார் என்றேன்.

ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை என்று கூறி ஊசி போட்டு சில மருந்துகளைக் கொடுத்தார்.இன்னும் ஒரு வாரத்தில நாய்க்கு ஒண்ணும் ஆகலேன்னா ஒரு பிரச்சினையும் இல்லை என்று கிளம்பும் போது கூறினார்.

நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா? பயத்துடன் வினவினேன்.

லேசான கடி தான் ஒண்ணும் ஆகாது பயப்படாம போய்ட்டு வாங்க என்றார்.

மிகுந்த வருத்தத்துடன் மருத்துவமனையிலிருந்து கிளம்பினேன்.டோரா மேல் கோபம்கோபமாய் வந்தது.

நிம்மதியான தூக்கமே இல்லை.சரியாக தூக்கம் வராததால் அதிகாலை போல உறங்கி லேட்டாகவே எழுந்தேன்.எழுந்தவுடன் வேகமாக கீழிறங்கி டோரா எப்படியிருக்கிறது என்று பார்க்கப் போனேன்.டோரா உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது.சந்தோஷமாக வீடு திரும்பினேன்.

நாள் முழுவதும் டோராவைப் பற்றிய நினைப்பாகவே இருந்தது.வேலையில் கவனமே செல்லவில்லை.

தவிர்க்க முடியாத வேலை என்பதால் அடுத்த நாள் ஹைதராபாத் சென்றேன்.அங்கும் மனம் ஒரு நிலையில் இல்லை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மனைவிக்கு போன் பண்ணி டோராவின் நிலையைப் பற்றி கேட்டறிந்து கொண்டேன்.

டூர் முடித்து ஒரு வாரம் கழித்து திரும்பியபோதும் டோரா நலமாகவே இருந்தது.திரும்பவும் என் மகனை அழைத்துச் சென்று டாக்டரிடம் காண்பித்தேன்.டோரா நன்றாக இருப்பதையும் அவரிடம் கூறினேன்.

என் மகனை பரிசோதித்து பார்த்துவிட்டு ஒண்ணும் பிரச்சினையில்லை நோ ப்ராப்ளம்.இனி மேல் நாயிடம் விளையாட விடாதீங்க என்றார்.

என் மகனை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பினேன்.

நான் எனது வீட்டை நெருங்கியபோது டோரா வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தது.சுற்றிலும் பார்த்தேன் யாருமில்லை.டோராவின் வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டேன்.கீ கீ என்று சத்தமிட்டுக் கொண்டே தூரமாய் விழுந்தது.

டிசம்பர் 14, 2007

எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 3:52 பிற்பகல்

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் துணையெழுத்து தொடராக வந்தபோது (எஸ்,ராமகிருஷ்ணனின் எழுத்தைப் பற்றி அப்போது எந்தவித அறிமுகமும் எனக்கு இல்லை) படிப்பதற்கு சுவராஸ்யமாக இருந்தது. முன் எப்போதும் படித்திடாத  நடையில் இருந்ததும்,சிறு நிகழ்ச்சியையும்,நிகழ்வையும் சுவைபட கூறிச் செல்லும் பாங்கும் காரணமாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.

புத்தகவடிவில் வந்த பிறகு சமீபத்தில் வாங்கிப் படித்தேன்.படிப்பதற்கு இனிமையாகவே இருந்தது.முழுவதும் கட்டுரை வடிவில் எழுதப்பட்ட சிறுகதைகள் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக பிடித்துப்போகின்றன. ”தினப்படி வாழ்க்கையின் சலிப்பூட்டும் சம்பவங்கள்,முரண்பாடுகள்,தப்பிச் சென்றுவிட முடியாதபடி ஓடஓட  தொடர்ந்து வந்து வெறுப்பேற்றும் மனிதர்கள்” முதலான விஷயங்களை  அழகுற எழுதியதால் ஆதவனுடைய எழுத்தும்,

ரிக்சா கதையில் ரிக்சா என்ற வார்த்தையின் உச்சரிப்பை தனது குழந்தைக்கு கற்றுத்தர முயற்சி செய்கின்ற தந்தைக்கும் அந்தக் குழந்தைக்கும் இடையேயான உரையாடல் மூலம் ஏற்படுத்திய அடக்கமுடியாத சிரிப்பும்,”ஒடிசலான தேகத்தையுடைய பனிரெண்டு வயதுச் சிறுமி தனது வீட்டுக்குள் திடுமென நுழைந்த ஒருவனை தீவிரவாதியென நினைத்து அவனிடமிருந்து தன் தம்பியைக் காப்பாற்றுவதற்காக  என் தம்பியை விட்டுருங்க   என்று சொல்லிக் கொண்டே தனது மார்பைத் திறந்து காண்பிப்பதாக முடியும் கதையும் அசோகமித்திரனின் எழுத்து பிடித்துப் போனதற்கான காரணங்களாயின.

 ”கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் கும்பாமுனி என்ற எழுத்தாளர் தீபாவளி மலருக்காக நான்கு நாட்களுக்குள் கதை எழுதியாக வேண்டிய சூழ்நிலையைப் பற்றி கதை நெடுக நக்கல் தொனியில் எழுதியமைக்காக நாஞ்சில் நாடனின் எழுத்து மிகவும் பிடித்துப் போய்விட்டது.படித்துக் கொண்டிருக்கும் போதே மூன்று நான்கு முறை விழுந்துவிழுந்து(in the literal sense) சிரித்தேன்.

துணையெழுத்தைப் படிக்கும்போது பிடித்த நன்றாக கதை சொல்லத் தெரிந்த நண்பனிடம் தனியாக அமர்ந்து நாள் முழுக்க கதை கேட்டால் ஏற்படக்கூடிய இன்பம் கிடைக்கிறது.

தலையற்ற பொம்மை,வடு போன்ற மிகச் சாதாரணமான விஷயங்களில் ஆரம்பித்து ஒரு சுவராஸ்யமான கதையைக் கூறிவிடுகிறார். இதைத் தவிர வெயில்,மழை,காற்று,அருவி,கூழாங்கல் முதலான பல விஷயங்களுக்கு அவர் கையாளும் உவமைகள் புதுமையாகவும் அழகாகவும் இருக்கின்றன. 

துணையெழுத்து படித்துவிட்டு அவருடைய நெடுங்குருதி நாவலை படிக்க ஆரம்பித்தேன்.நூறு பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டேன்.தொடர்ந்து படிப்பேனா இல்லையா என்பதை இன்னுமொரு இருபது பக்கங்கள் படித்துவிட்டு முடிவு செய்யவேண்டும்.நடை மிகவும் அலுப்பூட்டுவதாக இருக்கிறது.

நவம்பர் 26, 2007

தொலைந்து போனவன்

கோப்பு வகை: Uncategorized — ஜெய்க்குமார் @ 6:36 நான்
Tags:

டேவிட் அவனது வீட்டை விட்டுத்  தொலைந்து போனது இடியுடன் கூடிய ஒரு மழை நாளில்.ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் காணாமல் போனான்.வீட்டிலுள்ளவர்களிடம் சண்டை போட்டோ,கோபப்பட்டோ,அடிவாங்கியோ,பரிட்சையில் பெயிலாகியோ,ஸ்கூல் பிடிக்காமலோ தொலைந்து போகவில்லை.கணக்கு மட்டும் பிடிக்காது அவ்வளவுதான்.

நேற்று சாயங்காலம் வரை அப்படிப்பட்ட எந்தவொரு எண்ணமோ,நினைப்போ அவனிடம் இல்லை.

இவ்வளவுக்கும் டேவிட் வீட்டிலிருந்து ஏழெட்டு வீடு தள்ளியிருக்கிற  பணக்காரன் என்று டேவிட் வீட்டாரால் பேசிக்கொள்ளப்பட்ட  குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காணாமல் போனான்.குமாரின் அப்பா விரல்களில் இருந்த பத்து வகை மோதிரங்களும்,கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டும்,அவரிடமிருந்த புல்லட்டும் டேவிட் குடும்பத்தாருக்கு அவர்களை பணக்காரர்கள் என்று தீர்மானிப்பதற்குபெரிதும் உதவியாகவும்,உப-யோகமாகவும் இருந்தது.

காணாமல் போன குமாரைப் பற்றி விசாரிப்பதற்காக டேவிட்டின் அம்மா குமார் வீட்டிற்கு போனபோது டேவிட்டையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்கள்.ஸ்கூலில் புதிதாய் வாங்கிக் கொடுத்த செருப்பைத் தொலைத்ததற்காக அவனுடைய அப்பா அவனை அடித்ததாகவும் அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டதாகவும் ஏற்கனவே விசாரிக்க வந்தவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டைவிட்டுப் போகும்போது சாப்பிடாமல்கொள்ளாமல் போய்விட்டதாகவும்,இப்பொழுது எங்கே இருக்கிறானோ எப்படி இருக்கிறானோ பசி கூடத் தாங்கமாட்டான் என்று அவனுடைய அம்மா பலவாறாக புலம்பிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தாள்.

வீட்டுக்கு வந்திருந்தவர்களும் இறுகிய முகத்தோடு கவலையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இங்கே தேடினீஙகளா அங்கே பார்த்தீர்களா என்று ஒரு சிலரும், எங்கேயும் போகமாட்டான் இன்னும் ரெண்டொரு நாளில் அவனே வந்துவிடுவான் என்று வேறு சிலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

டேவிட்டின் தலைக்குள் நண்டு பிறாண்ட ஆரம்பித்தது அப்பொழுது தான்.

குமாரை மாதிரி நாமும் தொலைந்து போய்,கணக்கு வாத்தியாரிடமிருந்தும்,திங்கட்கிழமை நடக்கவிருக்கும் கணக்குப் பரிட்சையிலிருந்தும் தப்பிவிடலாமென்று  முடிவெடுத்தான்.இல்லாவிட்டாலும் வேறொரு சந்தர்ப்பத்தில் காணாமல் போயிருப்பான்.அது அவர்களின் பரம்பரைப் பழக்கம்.அவனோட தாத்தா,சித்தப்பா,அவனோட கடைசி அத்தை வரைக்கும் எல்லோருமே சிறு வயதில் ஒருமுறையாவது வீட்டை விட்டுக் காணாமல் போனவர்கள் தான்.

அவர்கள் வீட்டு வழக்கப்படி சர்ச் போய் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மட்டன் குழம்பும் சுடச்சுட இட்லியும் சமைத்திருந்தார்கள்.அவர்கள் வீட்டு மட்டன் குழம்பு பாண்டி நாட்டு ஈவினிங் புரோட்டா ஸ்டால்களில் கிடைக்கும் சுக்கா போல் ஏறக்குறைய இருக்கும்.அந்த அளவுக்கு அடர்த்தியாக இருக்காது.ஆனால் டேவிட் அம்மா வைக்கும் குழம்பில் சின்னவெங்காயம் அதிகமாக இருக்கும்.மட்டனைவிட எண்ணையில் மசிந்து போய் குழம்போடு குழம்பாக இரண்டறக் கலந்திருக்கும் வெங்காயம் சுவையுடன் இருக்கும்.டேவிட்டின் குடும்பத்தார்  மதுரையில் ஓட்டல் ஆரம்பித்திருந்தால் அம்மா மெஸ்,சந்திரன் மெஸ்,ஆறுமுகம் கடை,குமார் மெஸ் போன்றவர்களெல்லாம் கடை நடத்தியிருக்க முடியாது. 

நன்றாக சாப்பிட்டுவிட்டு அவனுடைய அப்பாவின் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினான்.

டேவிட் அவனது வீட்டிலிருந்து வெளியேறும்போது மழை வெறித்திருந்தது.

இதுதான் முதன்முறை என்பதாலும் எங்கு தொலைந்து போவது என்பதைப் பற்றி முன் கூட்டியே யோசிக்காததாலும் தொலைந்து போகின்றவர்கள் எப்படி தொலைகிறார்கள் என்று அவன் அறியாததாலும்  வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு அவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது.

யோசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் நடந்த பிறகு ஊருக்கு வெளியே இருக்கும் கல் குவாரிக்கு வந்தான்.வெடி வைத்துத் தகர்த்த பிறகு அதற்கு மேல் தோண்டி எடுப்பதற்கு பெரிதாக ஏதும் இல்லாததால் அப்படியே பல நாட்களாய் உபயோகமற்று விடப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு போன்ற அவனுக்கு மிகவும் பிடித்தமான இடத்திற்கு வந்தடைந்தான்.இறங்குவதற்கான வழி சற்று சிரமமாக இருக்கும்.அவன் பல முறை ஏற்கனவே வந்திருப்பதால் அவனுக்கு அது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

உள்ளே இறங்கினால் ஒரு பக்கம் பெரிய குட்டை போல் மழைக்காலங்களில் நீர் தேங்கியிருக்கும்.மறுபக்கம் அழகழகான செடி கொடிகளும்,சிறிய பெரிய  மரங்களும் இருக்கும்.மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளும்,பல வகையான வெட்டுக்கிளிகளும்,தட்டான்களும் பறந்துகொண்டும் குதித்துக்கொண்டும் இருக்கும்.

அவனும் அவனுடன் ஏழாவது படிக்கும் சேகரும் வழக்கமாக அமர்ந்து விளையாடும் சிறிய குகை போன்ற இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்.

என்ன செய்வது என்று தெரியாமல் மேலும்,கீழும் பார்த்தான்.சர்ச்சில் உபதேசியார் கூறிய கதைகள் ஞாபகத்துக்கு வர வானத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தான்.

ஜீசஸை விட சம்மனசுகளை பார்க்கத்தான் அவனுக்கு மிகவும் விருப்பம்.அதனால் சம்மனசுகளை நினைத்து பிரார்த்தித்தான்.அவர்கள் அவன் கண்களுக்கு காட்சியளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டான்.அவன் கவனக்குறைவாக இருக்கின்ற  சந்தர்ப்பத்தில் சம்மனசுகள் வானத்தில் கடந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக கண்ணிமைக்காமல் வானத்தையே பார்த்தபடி இருந்தான்.சிறிது நேரத்திற்கெல்லாம் கழுத்து வலிக்க ஆரம்பித்தது.அதை பொறுத்துக்கொண்டு வேண்டிக்